காரைக்கால் அம்மையார் புராணம் (பாகம் 1)
காரைக்கால் அம்மையார் புராணம்
(பாகம் 1)
சோழநாட்டில்
ஒளிரும்
சங்குகள் ஒதுங்கும்
கடற்கரை நகரம்
திருக்காரைக்கால்.
அது ஒரு
துறைமுகப்
பட்டினமும் கூட.
எந்நேரமும்
ஏற்றுமதி இறக்குமதி
என நகரெங்கும்
ஏக பரபரப்பு இருக்கும்.
காரைக்காலில்
அறநெறி தவறாத
வாய் நெறி மிக்க
சிவநெறி வணிகர்
ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் தான்
அந்நகர
வணிகர்களின் தலைவர்.
பெயர் தனதத்தர்.
வைசியர்
குலத்
தவப்பயன்
காரணமாக அவருக்கு
ஒரு செல்ல மகள் பிறந்தாள்.
அவளுக்கு
இறைவன் குறித்து
வைத்திருந்த
பெயர் இரண்டு.
முதலாவது பெயர்
புனிதவதி.
குழந்தைப் பருவத்திலேயே
சிவபக்தி நிறைந்திருந்தது.
வளரும் பருவத்தில்
அவள் உச்சரிப்பில்
சிவ நாமமே மிகுந்திருந்தது.
மலரும் காலத்தில்
அழகிற் சிறந்த
அழகுக் கொழுந்தாய்
மிளிர்ந்தாள்.
தோழிகளுடன்
விளையாடும்போது கூட
சிவமயமாய் இருந்தாள்.
தமிழ்ப் புலமையும்
தமிழ் இசையும்
இறையருளால்
இயல்பாய்
அவளோடு
இணைந்திருந்தது.
சிவனடியார்களைக்
கண்டால் போதும்
போட்டது போட்டபடி
விட்டு விட்டு
வாசலுக்கு ஓடிப்போய்
பாதம் பணிந்து
வீட்டிற்குள் அழைப்பாள்.
திருவமுது படைப்பாள்.
நெஞ்சுருக
நஞ்சுண்டவரின்
கதை கேட்பாள்.
கைநிறைய
பொன் பொருள் கொடுத்து
மனம் நிறைவாள்.
பருவ வயது
நெருங்கி வந்தது.
உருவம்
ஊர் கண்படும்படி
சாமுத்திரிகா லட்சணப்படி
வனப்புமிகு ஆனது.
பேரழகுப் பெட்டகமாய்
புனிதவதி திகழ்ந்தாள்.
சிவபெருமான் மீது
தணியாத காதல்
கொண்டிருந்த
புனிதவதிக்கு
நாகப்பட்டினம்
நிதிபதி என்னும்
பெரு வணிகர்
வீட்டிலிருந்து
மூதறிவாளர்கள் மூலம்
கல்யாண
விசாரணை வந்தது.
நிதிபதியின்
மகன் பரமதத்தனே
மணம் பேச வந்த
தூதுவர்களின் மணமகன்.
தனதத்தர்
குலம்
குடி
கோத்திரம்
குடும்பம்
ஜோதிடம்
மணமகன்
எனச் சகலமும்
பார்த்து
சரி சொன்னார்.
பண்டைய காலத்தில்
பெண் வீட்டில்தான்
திருமணம் என்பது மரபு.
சீதைக்கும்
திரௌபதிக்கும்
தமயந்திக்கும்
தாய் வீட்டில் தானே
திருமணம் நடந்தது!
தந்தை நிதிபதியும்
மணமகன் பரமதத்தனும்
உறவினர் புடை சூழ
காரைக்கால் வந்தனர்.
சிறப்பான
செல்வச்
செழிப்பான திருமணம்
காரைக்கால்
அதுவரை கண்டிராத
வகையில் நடந்தேறியது.
" 'மயில்' போன்ற
புனிதவதிக்கும்
'காளை' போன்ற
பரமதத்தனுக்கும் ஒத்துவராதே....ஆகாதே!"
என்று கணித்த
மூத்த ஜோதிடர்களின்
மெல்லிய
குரல் ஒலிகள்
மங்கல வாத்தியத்தாலும்
ஊர்மக்கள்
வாழ்த்தொலிகளாலும்
முற்றிலுமாய்
யாருக்கும் கேட்காமல் போனது.
இல்வாழ்க்கை
இனிதே தொடங்கியது.
தனது ஒரே மகளை
மாப்பிள்ளை வீட்டிற்கு
அனுப்ப மனமில்லை
தனதத்தருக்கு.
சம்பந்தி வீட்டோடு
கலந்துபேசி
அவர்களின்
சம்மதத்தோடு
தன் வீட்டு அருகே
தனி வீடு பார்த்து
குடி அமர்த்தினார்.
பரமதத்தனுக்கு
காரைக்காலிலேயே
பணம் கொட்டும்
தொழில் அமைத்தார்
மாமனார் தனதத்தர்.
காதலும்
வணிகமும்
கைகூட எக்குறையும்
இன்றி
புனிதவதி - பரமதத்தன்
இல்வாழ்க்கை
நல்வாழ்க்கையாகத்
தொடர்ந்தது.
சிவபக்தியும்
சிவனடியார் சேவையும்
கிஞ்சிற்றும் பாதிக்காமல்
முன்னைவிடச்
சிறப்பாகச் செய்து வந்தாள்
திருமதி புனிதவதி.
நாடி வந்த
சிவனடியார்களுக்கு
நவமணிகள் தந்தாள்.
உயர்ந்த
புத்தாடைகள் தந்தாள்.
வேண்டுவன யாவும்
பரிவோடு தந்தாள்.
கவி பாடும்
தமிழ்ப் புலவர்களுக்குப்
பெரும் பொருள் தந்து
பேணிக் காத்து வந்தாள்
புண்ணியவதி புனிதவதி.
இல்லத்தில்
கணவன்
இல்லாத போதும்
திருத்தொண்டர்கள்
வராதிருந்த சமயத்திலும்
பரம்பொருளின்
திருவடிகளைத் தியானித்து
பேரன்பின் வெளிப்பாடாய்
ஒளிர்ந்தாள் புனிதவதி.
ஒருநாள்
பரமதத்தனிடம்
வணிகம் பேச
வந்த வணிகன் ஒருவன்
இரு மாங்கனிகளை
மரியாதை நிமித்தமாக
வழங்கி
அக்கனிகளின் சுவையைப்
பெருமைபட எடுத்துரைத்தான்.
பரமதத்தன்
அவற்றை
அன்போடு வாங்கி
ஏவலனை அழைத்து
வீட்டில்
கனிவோடு காத்திருக்கும்
கனிமொழியாளிடம்
கொடுத்து
வரச் சொன்னான்.
கனிகளை வாங்கிய
புனிதவதி
கண்ணாளனுடன்
மதியம் உண்ணலாம்
எனப் பத்திரமாக
ஓரிடம் வைத்தாள்.
அப்போது
வாசலிலே
ஓர் அழைப்பு.
சிவமணம் கமழ
சிவநாமம் ஒலித்தபடி
ஒரு சிவனடியார்
நின்றிருந்தார்.
மகிழ்ச்சியின்
உச்சிக்கே போன
புனிதவதி
வாசலுக்கு விரைந்து
சிவனடியார்
பாதம் பணிந்து
புனித நீரால்
பாதம் கழுவி
வீட்டினுள்
அழைத்து வந்தாள்.
ஆசனம் தந்து
அமரச்சொல்லி
திருவமுது படைக்க
உட்புறம் சென்றாள்.
வீட்டில் அப்போது
அமுது மட்டுமே
தயாராக இருந்தது.
காய்கறிகள் ஏதும்
போதுமானதாய் இல்லை.
கவலை கொண்ட
புனிதவதிக்குக்
கணவன் கொடுத்தனுப்பிய
கனிகள்
ஞாபகத்திற்கு வந்தன.
சமாளித்து விடலாம்
எனத் துள்ளிக்குதித்து
அமுது படைத்து
மாங்கனி ஒன்றை
நறுக்கி வைத்தாள்.
வரும்போது
தளர்ந்து வந்த
சிவனடியார்
வயிறார உண்டார்.
மனதார வாழ்த்தினார்.
ஆசி கூறி
விடை பெற்றார்.
புனிதவதி மனம்
நிறைந்து போனாள்.
அன்றைய
சிவ சேவையை
எண்ணிப்
பூரித்துப் போனாள்.
மதிய உணவருந்த
'காளை' பரமதத்தன்
வீட்டிற்கு வந்தான்.
'மயில்' புனிதவதி
தோகை விரித்துப்
பரிமாறினாள்.
மீதமிருந்த கனியைக்
கணவனுக்குத் தந்து
அவன் ருசிப்பதை
ரசித்திருந்தாள்.
"இப்படி ஒரு ருசியா....
தேவ அமுது போல் இருக்கிறதே....!"
எச்சிலூறத் திளைத்தவன்
இன்னொரு
கனியையும் கேட்டான்.
புனிதவதி
துடித்துப் போனாள்.
'என்ன சொல்வது ?
சிவனடியார்
வந்த நிகழ்வைச்
சொல்வதா ?
அவருக்கு
மாங்கனியைத்
தந்த கதையைச்
சொல்வதா?
இரண்டில் ஒன்று
தனக்குத்தான்
என எண்ணி
அவருக்குக்
கொடுத்து விட்டதாக
நியாயப்படுத்துவதா?
உண்மையைச்
சொல்வதா?
ஏதேனும் சொல்லிச் சமாளிக்கலாமா?'
குழப்பத்துடன்
'சரி' என்கிற மாதிரி
தலையை
அசைத்துக் கொண்டே
சமையலறைக்கு ஓடியவள்
சதாகாலமும்
வணங்கும் சங்கரனை
வேண்டி நின்றாள்.
'அடியவர்
அல்லல் களையும்
அருட்கடலே!'
என்ற பக்தையின்
குரல் கேட்டு
பேரருளாளர்
எம்பிரான்
மாங்கனி ஒன்றை
அவளது
இறைஞ்சிய கரங்களில்
மந்திரமாய் வைத்தார்.
கண் திறந்த
புனிதவதி
கருணைக் கடலுக்கு
நன்றி கூறி
உணவருந்திக்
கொண்டிருந்த
கணவனிடம் ஓடி
மாங்கனியைத் தந்து
முகம் பார்த்து நின்றாள்.
அக்கனியைச் சுவைத்த
கணவன் பரமதத்தன்,
"புனிதவதி....!
முதலில்
சாப்பிட்ட
மாம்பழத்தின் சுவைக்கும்
இப்பழத்தின் ருசிக்கும்
பெரிய
வேறுபாடு உள்ளது.
இதுவரை
நான்
சுவைத்திராத
அதிமதுர ருசி....!
ஆஹா...... என்ன ருசி...!
இது நிச்சயம்
அந்த வணிகன் தந்த
மாங்கனி அல்ல....
சுவை மட்டுமல்ல...
கனியின் நிறமும் கூட
மாறுபட்டுள்ளது.
மூவுலகிலும்
பெறுதற்கரிய
இக்கனியை
எங்கிருந்து பெற்றாய்?
என்ன விசேஷம்?
ஏது நடந்தது?
இந்த மாங்கனி
ரகசியம் கூறு?"
ஊடலுக்காக
விளையாட்டாகத்தான்
கேட்டான்
கணவன் பரமதத்தன்.
புனிதவதிக்குத் தான்
வார்த்தைகள்
வர மறுத்தன.
உண்மையைச்
சொல்லவும் முடியாமல்
சொல்லாமல்
இருக்கவும் முடியாமல்
தத்தளித்தாள் தெய்வமகள்.
'கட்டிய கணவனிடம்
கற்பு ஒழுக்கம் பேணும்
பெண் எதையும்
மறைக்கக்கூடாது'
மனது கூச்சலிட்டது.
மாங்கனிக்காக
அண்ணன் விநாயகனுக்கும்
தம்பி முருகனுக்கும்
சண்டை மூட்டி
திருவிளையாடல் புரிந்த
விளையாட்டு நாயகனை
மனதினுள் வேண்டி
தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு
நடந்ததை எல்லாம்
ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள்
கற்பரசி புனிதவதி.
விளையாட்டாய்
கணவன் கேட்டதற்கு
விந்தையாய்
மனைவி பதிலளித்ததை
இப்போது
கணவன் ருசிக்கவில்லை.
"புனிதவதியே...!
உலகாளும் சிவன்
உன்
பிரார்த்தனையைக் கேட்டு
கனி தந்தார் என்பதை
அவன்மீது அதீத
நம்பிக்கை உள்ள
நான் மட்டுமல்ல....
எவரும் நம்ப மாட்டார்.
அது
உண்மையெனில்
எனக்கு இதே போல்
ஓர் அதிமதுரக் கனியை
ஆதிநாதரிடம் வேண்டி
வரவழைத்துத் தா....!
அப்போது நம்புகிறேன்."
இயந்திரம் போல்
ஆனால்
கண்ணீருடன்
பூசை அறைக்கு
விரைந்தாள் புனிதவதி.
'உற்றவிடத்து
உதவும் பெருமானே ..!'
எனக்
கண்ணீர் மல்க
வேண்டி நின்றாள்.
'தன்னிகரில்லாதானே..!
நான் பொய்
உரைக்கவில்லை
என்பதை
என் கணவரிடத்து
உறுதிபட உணர்த்தி
நம்பிக்கை ஏற்படுத்து..!'
கைகூப்பி நின்றாள்.
கனிந்துருகிக்
கேட்பவர் குரலுக்கு
ஓடோடி வந்து
விரைவில் அருளும்
கயிலாயன்
கனி ஒன்றை
உடனே மங்கையர்க்கரசியின்
முன் வைத்து
மாயமாய்
மறைந்து போனார்.
மாங்கனியுடன்
மங்களகரமாய்
தேவதை போல் வரும்
புனிதவதியைக்
கண்ணுற்ற பரமதத்தன்
வியந்து போனான்.
பயந்தும் போனான்.
புனிதவதி
பரமன் தந்த
புனிதக் கனியை
பரமதத்தனிடம்
கொடுத்தாள்.
அனிச்சையாய்
அச்சத்தோடு வாங்கியவன்
அதை
உற்று நோக்குவதற்குள்
அந்த மாங்கனி திடுமென
மறைந்து போனது.
பரமதத்தனின்
மனோ பயம்
இன்னும் அதிகமானது.
அவனது மனம்
பல கிளைகளாக
விரிந்து விரிந்து
சிந்திக்க சிந்திக்க
பல யோசனைகள்
வந்து போயின.
அத்தனையும்
அச்சம் தந்தன.
அவன் மனம்
அதிகம் தடுமாறியது.
'புனிதவதியார்
மானிடப் பிறவி அல்லர்.....
ஒரு தெய்வப்பிறவி.
கடவுள் போல
தொழத்தக்கவர்.
கணவரென
தொடத்தக்கவரல்ல.
அவரோடு வாழ்தல்
தெய்வக் குற்றம்.
அவர்
தனக்குப் பணிவிடை
செய்வது
அதைவிடப் பாவம்.'
பயபக்தி
பயத்தையும்
பக்தியையும் கூட்டியது.
வீட்டில் இருக்கும்
தெய்வத்தை
வணங்கக் கூறியது 'அச்சம்'.
விலகி இருக்க
எச்சரித்தது 'மனது'.
அதுமுதல்
புனிதவதியாருக்கும்
பரமதத்தனுக்கும் தாம்பத்தியம்
இடைவெளி கண்டது.
பேச்சு குறைந்தது.
மரியாதை மிகுந்தது.
இவ்விஷயம்
எவருக்கும் தெரியாது
ரகசியமாயும் இருந்தது.
(காரைக்கால் அம்மையார் புராணம்- தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக