சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 5)

 


சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 5)

-மாரிமைந்தன் சிவராமன்


சதாசிவ
பிரம்மேந்திரர்
கைப்பட்ட
மெய்ப்பட்ட
புன்னை புரத்தாள்
மண்ணினால்
உருவாக்கப்பட்டவள்
என்பதால்
ஐந்து வருடத்திற்கு
ஒருமுறை தான்
சாம்பிராணித்
தைல அபிஷேகம்
என்பது ஓர்
ஆன்மிகத் தகவல்.

இன்னொன்று.

பட்டுப் புடவை
அம்பாளுக்குப்
பிடித்த ஒன்று.

பக்தர்களின்
பட்டுப் புடவைகள்
சார்த்தப்பட்டு
அவை
உரித்தெடுக்கும்
விழா நடக்கும்.

இதைக் காணக்
கண் கோடி
வேண்டும்.

அக்காட்சி
கண் நோய்களைத்
தீர்க்கும்.
கண்களுக்கு
ஒளியூட்டும்.


மைசூர்
சமஸ்தானம்
தஞ்சாவூர்
மன்னர் 
ஆகிய இருவர்
மட்டுமல்ல...

புதுக்கோட்டை
மகாராஜாவும்
பிரம்மேந்திரர்
பாதம் பற்றியவரே!

மூவருக்கும்
முத்தேக சித்தி பெற்ற
பிரம்மேந்திரருக்கும்
உள்ள நெருக்கம்
நீண்டது...
நெடியது...
சித்தியான
நிறை நாளன்றும்
ஒருங்கிணைத்தது.

புதுக்கோட்டை 
மகாராஜா
விஜய ரகுநாத
தொண்டைமான்
ஒரு விவேகி.

ஆழக் கற்றவர்.
சாஸ்திரம்
அறிந்தவர்.
சாதுக்களிடம் 
பிரியம்
கொண்டவர்.

அரசாட்சி எனில்
தெரிந்தும் 
தெரியாமலும் 
பாவங்கள் பல
சூழும்.

அதைச்
சாதுக்கள் மூலம்
தீர்ப்பது
சாலச் சிறந்தது
என
நம்பியவர்
தொண்டைமான்.

அதற்கு
மந்திரிமார்கள்
பிரம்மேந்திரரை
அரண்மனைக்கு
அழைத்து வந்து
ஆலோசனை
பெறலாம்
என்றனர்.

மைசூர்
சமஸ்தானத்தை
அலங்கரித்து
புதுக்கோட்டையையும்
புனிதப்படுத்தியவர்
பிரம்மேந்திரர் 
என்பதை அறிந்திருந்த
தொண்டைமான்
பலத்த
நம்பிக்கையுடன்
பிரம்மேந்திரரை
அழைத்து வர
பல்லக்குடன்
குதிரையேறினார்.

கண்ணும் 
கருத்துமாய்
அலைந்தும்
கண்ணுக்குப் 
புலப்படாத
கருணாமூர்த்தி
திருவரங்குளம்
காட்டில்
முள் மரங்கள்
மத்தியில்
அமர்ந்திருந்தார்.

கண்ட மன்னர்
மனம் மகிழ்ந்தார்.
முள்ளென்றும் பாராது
நெடுஞ்சாண்கிடையாக
தரை பதிந்தார்.

பேசா சுவாமி
கவனிக்கவும் இல்லை.
அரசன் அழைத்தும் 
செவி சாய்க்கவும் இல்லை.

விடாக் கண்டரான
புதுக்கோட்டை மகாராஜா
கண் கண்ட பிறகு
விடுவாரா சித்த சூரியனை?

அருகிலேயே
குடிசை போட்டு
முழு நேரச்
சேவையிலே
மூழ்கி விட்டார்.

ஓடின
சில நாட்கள்.

மகானிடம்
குறிப்பேதும் இல்லை.
மன்னனிடம்
அவசரம் சிறிதும் இல்லை.

ஒருநாள்
துணிந்து
பணிந்து
தனக்கு
தீட்சை வேண்டுமென்று
குருவிடம்
மௌனமாய்ச் 
சொன்னார் சீடர்.

மௌன சாமியாருக்கு
சம்மதம்
போலும்!

மணலிலே
மந்திரத்தை
எழுதிக்
காண்பித்தார்.
கற்பித்தார்.

சிக்கெனப்
பிடித்துக் கொண்டு
தீட்சை பெற்ற
சீடர்
தன்
அங்க வஸ்திரத்தில்
மகான்
விரல் பட்ட
மந்திரம்
பதிக்கப்பட்ட
அம்மண்ணைத்
தொட்டு வணங்கி
மெல்லிய வருடலில்
அலுங்காமல் 
குலுங்காமல்
எடுத்து
நிரப்பிக் கொண்டார்.

அதை
அப்படியே
அரண்மனைக்கு
எடுத்துச் சென்று
ஒரு
தங்கப் பேழையில்
வைத்து
அன்றாட பூஜையின்
பிரதான 
அங்கமாக்கினார்.

அந்தப்  பூஜை
இன்றும்
புதுக்கோட்டை
அரண்மனையில்
பிரசித்தம்.
ஆன்மிக
அருள் சித்தம்!

மீண்டும்
காடு திரும்பிய
மன்னர்
குரு சேவை 
தொடர்ந்தார்.
நாட்கள் நகர்ந்தன.

அவ்வப்போது
சந்தேகங்களைக்
கேட்டார் மன்னர்.

குரு இட்ட
உத்தரவினால்
சொல் விட்ட
பிரம்மேந்திரர்
பேசவே விரும்பவில்லை.

மன்னர்
மனம் தளரவில்லை.
காத்திருந்தார்.

ஒருநாள்
பிரம்மேந்திரர்
அவ்விடம்
விட்டு
வேறிடம்
செல்ல
நினைத்தார்.

சீடரை
அழைத்தார்.

சீடரின்
கண்களில்
கடகடவென
கண்ணீர்.

மௌன பாஷையில்
சேதி சொன்னார்.

'உத்தமர் கோயில்
செல்...

கோபால கிருஷ்ண
சாஸ்திரிகள்
அங்கிருப்பார்.

அவர் சொல்வார்.
சாஸ்திர சந்தேகங்களுக்கு
சாஸ்வதமான பதில்களை.'

பொற் பாதங்களைப்
பற்றிய மன்னர்
தலை நிமிர்த்தி
மகானின்
தலை பார்த்துச்
சொன்னார்.

"சுவாமி...!
எப்படியாகிலும்
தாங்கள்
என் நாட்டில்
சில காலம்
தங்கி
ஆசிர்வதிப்பீர்கள்
என
எதிர்பார்த்தேன்.

காற்றும்
நதியும் போல்
நிற்காமல்
போய்க் கொண்டே
இருக்கும்
ஞானவான்
தாங்கள் என
உணர்ந்தேன்.

தங்கள்
நிறைவு நாளில்
தங்கள்
சரீரத்தை
உதிர்க்கும் தருணத்தில்
நான்
உடனிருக்க
அருள் தாருங்கள்.
அது போதும்".

பிரம்மேந்திரர்
எதுவும் சொல்லவில்லை.
தலையாட்டம்
எதுவுமில்லை.
மௌன மொழியிலும்
எதையும் உணர்த்தவில்லை.

சில நொடிகள்
சிறிது நடந்தார்.
பின் மாயமானார்.

மகான் நடந்து
மறைந்த
திசையில்
மன்னர்
விழுந்தார்.
தொழுதார்.
எழ மனமில்லாமல்
எப்படியோ எழுந்தார்.

இடைப்பட்ட நாட்களில்
கானகத்திலிருந்த
போது -
ஒருமுறை 
தனக்குப்
புதுக்கோட்டை மன்னர்
வழங்கிய
வெண்ணெயை
அவரையும் 
அரசியையும்
உண்ணச் செய்தார்.
அதன் மூலம்
பேரருளாளர்
அருளியது
மகப்பேறு.

மகனுக்கு
மன்னனிட்ட செல்லப்
பெயர்
'நவநீத கிருஷ்ணன்'

'நவநீதம்'
என்றால்
வெண்ணெய்
என்று பொருள்.

குரு ஈந்த 
வெண்ணெய்
கரு ஈந்து
உருக்கொண்டதால்
இந்த 
காரணப் பெயர்
போலும்!

சதாசிவ பிரம்மேந்திரர் 
குருகுலப் பாடசாலையில் பயின்றபோது 
அமைந்த தோழர்கள் 
இருவர்.

ஒருவர் 
போதேந்திரர்.
இன்னொருவர் 
அய்யாவாள்.

ஒருநாள்
இருவர்
நினைப்பும்
பிரம்மேந்திரருக்கு
வந்தது.

அஃதெப்படி
சாத்தியம்?
உணர்வற்ற
ஞானிக்கு-
பற்றற்ற
மகானுக்கு
தோழமை
உணர்வு?!

பயிலும்
காலத்தில்
அவர்களுக்குள்
ஒரு
சங்கல்பம்.
பின்னாளில்
ஒருமுறை
சந்திக்க வேண்டுமென்று.

இது போன்றே
தோழர்
இருவருக்கும்
சிந்தையில்
எழுந்தது
அந்த
சத்தியம்.

பிரம்மேந்திரரின்
திருப்பாதங்கள்
கோவிந்தபுரம்
நோக்கி
நடந்தன.

அங்கே தான்
போதேந்திரர்
தங்கியிருந்தார்.

வாரம் தவறாமல்
அங்கு வந்து
குருநாதராக
விளங்கிய
போதேந்திரரைத்
தரிசித்து
அளாவுவது
திருவிசைநல்லூர்
வாழ்
அய்யாவாளின்
வழக்கம்.

கோவிந்தபுரம்
வந்த
பிரம்மேந்திரர்
வழியில்
காவிரிக் கரையில்
நாணல் புதர்
கண்டார்.

வந்த நோக்கம்
நினைவில்லை.
நாணற் படுக்கையில்
ஏகாந்தமாய்ப்
படுத்தார். 

சில நொடிகளில்
தவத்தின் உச்சியில்
தவழ ஆரம்பித்தார்.

அவ்வழி வந்த
அய்யாவாள்
நாணற் புதரில்
மகான் ஒருவர்
படுத்திருப்பதைப்
பார்த்தார்.

'யாரோ ஒரு
மகானுபாவர்'
என
மனது சொல்லியது.

அருகே
வந்து
பிரதட்சணம்
செய்து
தோத்திரம்
பாடித்
தொழுதார்.

மகான்
எழவில்லை.
அவர்
எழ மாட்டார்.

அவரது நிலை
எவர்க்கும் கிட்டாத
அதீத நிலை.

பின்
போதேந்திராவை
சந்தித்த
அய்யாவாள்
நாணற் புதர் நாயகர்
பற்றி
சிலாகித்தார்.

'திகம்பரர்
மகானுபாவர்.
நாணற் புதரில் ஒரு
கூகை கிடக்கிறது'
என
வியந்து
சொன்னார்.

போதேந்திரர்
அம்மகானைத்
தரிசிக்க விரும்பி
அய்யாவாளுடன்
காவிரிக் கரை 
வந்து 
நாணற் புதர் 
தேடினார். 

ஆட்களை
அழைத்து
புதர்களை
செடிகளை
அப்புறப்படுத்தி
மெழுகு
தீபமேற்றி
சாம்பிராணிப்
புகை எழுப்பி
அந்தப் பகுதியையே
ஆன்மிக பூமியாக்கினார்.

இத்தனைக்
களேபரம் நடந்தும்
சித்தர் பிரம்மேந்திரர்
கண் விழிக்கவில்லை.

பேரொளி பரப்பிய
வண்ணம்
ஒடுங்கிப் 
படுத்திருந்தார்.
ராம நாம
ஜெபம்
பாடினர்.
எழவில்லை.

இராமபிரானே
மயங்கும்
இனிய
கீர்த்தனைகள்
பாடினர்.
ஊஹும்!
கண் விழிக்கவில்லை.

இரண்டாவது
கீர்த்தனையில்
அவர்கள் பாடிய
சப்த பேதங்கள்
பிரம்மேந்திரரை
மெலிதாகக்
கண்விழிக்க
வைத்தன.

பாடல் தொனியின்
தவறை உணர்த்தியவர்
இருவரையும்
வணங்கினார்.

அவர்
சதாசிவமே
என
உணர்ந்த
இருவரும்
வணக்கம்
செலுத்தினர்.

பேச்சும்
மூச்சும்
அறவே இல்லை.

அருகிருக்கும்
ஆசிரமத்திற்கு
அழைத்தார்
போதேந்திரர்.

ஊஹும்!
பிரம்மேந்திரரிடம்
பதிலில்லை.
ஏற்பும் இல்லை.
மறுப்பும் இல்லை.

சிற்சில
கணங்கள்
இப்படிச்
சிதறின.

பின் -
எச்சலனமுமின்றி
பிரம்மேந்திரர்
எழுந்தார்.
சிறிது நடந்தார்.
ஆகாய மார்க்கமாக
விண்ணில்
பறந்து
மறைந்தார்.

பேசாதிருந்தாலும்
மனதினில்
பிரம்மேந்திரர்
பாடாதிருக்கவில்லை.
கீர்த்தனைகள்,
கிருதிகள்
படைக்காதிருக்கவில்லை.
நூல்கள்
அருளாமலிருக்கவில்லை
அருளாளர் பிரம்மேந்திரர்.

வடமொழி
அவருக்குச்
சேவகம் செய்ததால்
சமஸ்கிருதம்
சாமரம் வீசியதால்
பிரம்மேந்திரர்
அருளியவை
அனைத்தும்
இணையற்றுத்
திகழ்கின்றன.

எளிய நடை
பக்தி ரசம்
சித்தாந்த தெளிவு
வேதாந்த ஞானம்
நுட்ப விளக்கம்
அனுபவ நிறைவு
இவையே
பிரம்மேந்திரரது
நூல்களின்
அடிப்படை. 

'பிரம்ம சூத்திர விருத்தி'
பிரம்மேந்திரரின்
பிரதான படைப்பு
ஆன்ம அறிவுக்குத் தீனி.

பாமரருக்கும்
பண்டிதருக்கும்
உகந்த உரை நூல்.

'யோக சுகாதாரம்'
ஒரு சாஸ்திர நூல்.
பதஞ்சலி முனியின்
யோக சூத்திரங்களுக்கு
அனுபவ விளக்கமே
இந்நூல்.

உபநிஷத்துக்களுக்கு
தீபிகை
ஆரிய விருத்தத்தில்
பாடல்கள்
ஆத்ம வித்தியா விலாசம்
சித்தாந்த கல்ப வல்லி
முதலானவை
அவரது
அற்புதப் படைப்புகள்.

இசைக்கும்
தாளத்திற்கும்
இசையும்
அப்பாடல்களும்
அவர்தம் படைப்புகளும்
பிரம்மேந்திரர்
பெரிய ஆன்ம யோகி
என்றே பறை சாற்றும். 

காலச் சக்கரம்
யாருக்காகவும்
காத்திராமல்
சுழன்று
கொண்டிருந்தது.

பிரம்மேந்திரர்
நிகழ்த்திய
அதிசயங்கள்
சித்தாடல்கள்
ஆங்காங்கே
பிரசித்தி பெற்றன.

பல
எவர்க்கும்
தெரியாமல்
ரகசியமாயின.

மைசூர்
சாம்ராஜ்ஜியத்திலும்
புதுக்கோட்டை
சமஸ்தானத்திலும்
தஞ்சாவூரிலும்
பிரம்மேந்திரர்
பாதம் பதித்த
காடு மேடுகளிலும்
கழனி, கரைகளிலும் 
அவர் ஒரு
மகான் 
தெய்வ மகன்
என்ற
பிரமிப்பிருந்தது.

விராலிமலை
பிரம்மேந்திரருக்குப்
பிடித்த மலை.

அங்கு சென்று
அமைதியான குகையில்
தவத்தில்
ஆழ்ந்து விடுவார்.

இன்றும்
அக்குகையில்
அருளாளரைத்
தரிசிக்கலாம்.

அண்டை
நாடுகளையும்
விட்டு வைக்கவில்லை
அவதூதரின்
அருந்தவப் பாதங்கள்.

வட இந்தியா
சென்று
துருக்கி வரை
நீண்டது
பிரம்மேந்திரரின்
தேச சஞ்சாரம்.

போகுமிடங்களில் 
ஆதரவும்
துன்பமும்
இருந்தன.

இரண்டையும்
ஒன்றெனப் பாவிக்கும்
பிரம்மேந்திரரை
எதுவும்
எதையும்
செய்ய முடியவில்லை.

அவர் போக்கு
சித்தன் போக்காயிருந்தது.
சிவன் போக்காய்
ஒளிர்ந்தது.

உலகெங்கும்
உலா வந்த போதும்
அவரை ஏனோ
கருவூர்ப் பகுதியும்
காவிரி நதியும்
அமராவதி ஆறும்
நெரூர் பூமியும்
அதிகம் ஈர்த்தன.

ஓம் நமசிவாய!

(பாகம் 6 - தொடரும்)


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)