சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)

 


சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)

-மாரிமைந்தன் சிவராமன்


பின்னொரு
முறை..

அரசாங்க
முகாம்
ஒன்று.

அதிகாரிகள்
முன்னிலையில்
விறகு சேகரிக்கும்
வேலை.

கூலிகள்
தலைகளில்
கட்டுக் கட்டாக
விறகுக் கட்டுகளை
வைத்து
வேறிடம் மாற்றிக்
கொண்டிருந்தார்கள்.

அங்கு
யதேட்சையாக
வந்த
பிரம்மேந்திரர்
தலையிலும்
விறகுக்கட்டுச்
சுமையை
ஏற்றி விட்டார்
ஓர்
அதிகாரி.

பிரம்மேந்திரர்
எச்சலனமும்
இன்றி
தாங்க முடியா
அச்சுமையைச்
சுமந்து சென்று
பிறர்
போட்ட இடத்தில்
தானும் போட்டார்.

உடன்
அந்த
விறகுக் குவியல்
தீப்பிடித்ததைப் பார்த்து
பயந்து போயினர்
பார்த்திருந்தவர்கள்.

ஓடி வந்த
அதிகாரிகள்
'நடமாடும்
தெய்வம்' என
உணர்ந்து
சதாசிவ
பிரம்மேந்திரரை
வணங்கித்
தொழுதனர்.

அது போதும்
முகபாவம்
மாற்றமின்றி
போய்க் கொண்டிருந்தார்
அந்த மகான்.

பிரம்மேந்திரர்
குழந்தைகளிடம் 
பிரியம் 
காட்டுவார்.
பாமரர்களிடம்
பரிவு காட்டுவார்.

அவர்களை
மகிழ்விப்பார்.
உயர்விப்பார்.

விளையாடும் இடத்தில்
மரங்களிலிருந்து
கனிகளைத் தானாக
விழச் செய்து
அவர்களுக்குக்
கொடுப்பார்.

கருப்பஞ்சாலையில்
பொங்கும்
கருப்பஞ்சாறை
மாய மந்திரமாய்
சிறுவர்கள்
கைகளிலேந்திக்
குடிக்கச் செய்வார்.

ஒருமுறை
மதுரையில்
திருவிழா.

அது
மகான் பிரம்மேந்திரர்
கருவூர்ப் பகுதிகளில்
அலைந்து திரிந்து
கொண்டிருந்த காலம்.

குழந்தைகள்
திருவிழாவைக்
கண்டு களிக்க
வேண்டுமென
ஆசைப்பட்டனர்.

பிரம்மேந்திரரிடம்
தம்
ஆசையைச்
சொல்லினர்.

குழந்தைகளை
முதுகிலும் 
தோள்களிலும்
ஏறச் சொன்னார்.

இறுகணைத்துக்
கொள்ளச் சொன்னார்.
இரு கண்களையும்
மூடிக் கொள்ளச்
சொன்னார்.

அடுத்த கணம்
அனைவரும்
மதுரைத்
திருவிழாவில்
இருந்தனர்.

திருவிழா
களைகட்டி
இருந்தது.

அதைவிட
குழந்தைகளின்
முகங்கள்
வியப்பிலும்
விளையாட்டிலும்
ஜொலித்துக்
கொண்டிருந்தன.

திருவிழாக்
கொண்டாட்டத்தோடு
கோயிலுக்கும்
அழைத்துச்
சென்றார்.

வயிறு
நிறைய
உணவு படைத்து
கை நிறைய
பட்சணங்களையும்
வாங்கித் தந்தார்.

பின்னர்
வாண்டுகளை
கண்மூடச் சொல்லி
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கருவூருக்கு
அழைத்து வந்து
திருமாநிலையூரில்
இறக்கி விட்டு விட்டு
விடை பெற்றார்.

பெற்றோருக்கும்
உற்றோருக்கும்
செய்தி அறிந்து
பெரும் வியப்பு.

அத்தனைப் பேருக்கும்
சுவாமி மீதோ
ஏக கோபம்.

'குழந்தைகளை
திருவிழாவிற்கு
அழைத்துச்
சென்றது போல்
தங்களையும்
அழைத்துச்
செல்லவில்லையே!'
என்பதே
அவர்களின்
செல்லக்
கோபம்! 

படிப்பறிவில்லா
பாமரன் ஒருவன்.
பிரம்மேந்திரர்
பாதம் பற்றி
அவர் பின்னே
வந்து கொண்டிருந்தான்.

சுவாமியும்
ஏதும்
சொல்லவில்லை.
அப்படியே
ஒட்டிக்
கொண்டான்.

ஒருநாள்
சுவாமியிடம்
தன் ஆசையைச்
சொன்னான்
தயங்கியபடியே.

'ஸ்ரீரங்கநாதரை
தரிசிக்க ஆசை'

'அவ்வளவு தானே!'
என்கிற மாதிரி
இருந்தது
மகானின் நோக்கு.

கண்களை
மூடச் சொன்னார்
சைகையாலே!

மூடினான்
பாமர பக்தன்.

திறந்த போது
திருவரங்கத்தில்
இருந்தான்.
கூடவே
பிரம்மேந்திரர்.

இறைவனை
ஆசை தீர
தொழுது
மகிழ்ந்தவன்
கூட்டத்தில்
குருநாதரைத்
தொலைத்து
விட்டான்.

'அரங்கனை நம்பி
அருளாளரை
கைவிட்டு விட்டேனே'
கதறி அழுதான்.

அதன் பின்
தன் குருவைத் தேடி
ஊர் ஊராய்
அலைந்தான்.

குரு செல்லும்
இடமெல்லாம்
தேடத் தொடங்கினான்.

காடு, மேடு
கழனி, கரை
ஓரம், சாரமெங்கும்
தேடினான்.

தேடினான்.
தேடினான்...
விரக்தியின்
விளிம்பில்
ஓடியோடித் தேடினான்.

ஒரு நாள்
காவிரிக்
கரை ஓரமாய்
பிரம்மேந்திரரைக்
கண்டான்.

அடுத்த அடி
வைக்க
முடியாதபடி
அவர்
காலடி
விழுந்தான்.

அவன்
பற்றியதில்
இருந்த
பரவசம்
பிரம்மேந்திரருக்குப்
புரிந்தது.

அவன்
வெறும்
வேலையாள்
அல்ல.

வேதம், யோகம்
கிடைக்கப்பட வேண்டிய
சீடன் என
உணர்ந்தார்.

சீடனாக
ஏற்ற பின்னே
மந்திர உபதேசம்
செய்தார்.

பள்ளி சென்று
படித்திராத
கல்வி
வாசனை
கடுகளவும் இல்லாத
அந்தப் பாமரன்
பண்டிதரானான்.

மகா பண்டிதனாகி
புராணப் புலமையில்
இணையற்றவனாகி
உலகை வியக்க
வைத்தான்
அந்தச் சீடன்.

பலபடி உயர்ந்தும்
பிரம்மேந்திரர்
சீரடி தவிர
எதையும் ஓதாது
பிரம்மேந்திரர்
தன்னை
திருவரங்கம் 
அழைத்துச் 
சென்றது முதல் 
குரு அருளிய 
அற்புதங்கள் 
ஒவ்வொன்றையும் 
அற்புதமாய்ச் 
சொல்வதை 
அன்றாட 
கடமையாகக் 
கொண்டான்.

பின்னாளில்
'ஆகாச புராண
இராமலிங்க சாஸ்திரிகள்'
என்ற பெயரில்
போற்றப்பட்டவர்
அந்த பாமரச் சீடரே!

இன்று கூட
அவரது
சந்ததியார்
நெரூரில்
வசித்து வருவது
கண்கூடு.

இது
சாஸ்திரிகள் 
முன்னோர் செய்த
புண்ணியம் அன்றோ!

ஒரு தடவை
ஒரு வைணவர்
நேபாளம் சென்று
சாலிகிராமம்
வாங்கி வர
வணங்கி நின்றார்.

நொடியில்
நேபாளப் பயணம்
நிகழ்ந்தது.

சாலிகிராமம்
அவ்வளவு 
சீக்கிரத்தில்
கிடைக்கப் பெற்று
மனம் நிறைந்த
வைணவர்
'பெருமானே!'
எனப்
போற்றி
நின்றார்.

கண்ணிமைக்கும்
கால அளவில்
ஸ்ரீரங்கத்தைச்
சீடர்
காணச் செய்ததும்
நேபாளப் பயணமும்
அரசல் புரசலாய்
ஊரெங்கும்
பரவியிருந்தது.

கருவூரைச்
சேர்ந்த
கனபாடிகள் சிலரும்
சாஸ்திரிகள் பலரும்
திருப்பதிக்குப் போய்
திருமாலைத் தரிசிக்க
ஆயத்தம் செய்யுமாறு
பிரம்மேந்திரரிடம் 
வேண்டி நின்றனர்.

நாவசைக்கா
நாயகன்
தலை அசைத்து
சம்மதம் சொல்லி
உடன்
ஜன ஆகர்ஷண
சக்கரம் ஒன்றை
எழுதினார்.

அதை அப்படியே
தான்தோன்றி மலை
வெங்கட்ரமண சுவாமி
குடைவரைக் கோயிலில்
வைத்து
வணங்கி நின்றார்.

'திருப்பதி சென்று
ஓங்கி உலகளந்த
வெங்கடாசலபதியை
வேண்டும் வரம் யாவும்
தான்தோன்றி மலைக்குச்
சென்று
வணங்கினாலே
கிட்டும்.

இரு பெருமான்களும்
ஒருவரே!
இரு கோயில்களின்
அருள் தன்மையும்
ஒன்றே!'
என்பதை
அன்று
அழைத்து வந்த
ஆன்றோரை
உணரச் செய்தார்.

அன்றைய நாள்
புரட்டாசி மாதம்
மூன்றாவது
சனிக்கிழமை.

இப்போதும்
புரட்டாசி
மூன்றாம் சனிக்கிழமை
தான்தோன்றி மலையில்
சிறப்பாகக்
கொண்டாடப்படுவது
ஓர் ஆன்மீக நிகழ்வு.


அவர்
தஞ்சாவூர்
மகாராஜா.

அவருக்கு
ஓர் ஆசை
மகள்.

மக்களின்
நலனுக்காகவும்
மகளின்
எதிர்காலத்திற்காகவும்
இராமேஸ்வரம்
சென்றார்
மன்னர்.

உஷ்ணமோ
என்னவோ
மகளுக்கு
கண்களில்
பிரச்சனை.

கண்களில்
இரத்தம்
வடிந்த வண்ணம்
இருந்தது.

மன்னர்
பற்பல
மருத்துவம்
பார்த்தார். 

அரண்மனை
சரக்கும்
அயல்நாட்டு
மருந்தும்
கண் நோய்
தீர்க்கவில்லை.

துடித்த மன்னர்
இறைவியை
நாடினார்.
வேண்டினார்.

வேண்டிய
தெய்வம்
அருகிருக்கும்
சமயபுரம்
மாரியம்மன்!

அன்றிரவே
அவருக்கு
ஒரு கனவு.

கனவில்
வந்ததும்
ஒரு தாய்.
அவரும்
சமயபுரத்தாள்
போலிருந்தாள்.

ஆனால்
தொனி தான்
கொஞ்சம்
காரமாயிருந்தது.

'நீ ஒரு நாட்டின்
அரசனாய் இருக்கலாம்.
உன் மகள்
இளவரசியாய்
இருக்கலாம்.

ஆனால் எனக்கு
நீ மகன் தான்.
என் சாம்ராஜ்யத்தில்
ஒரு பிரஜை தான்.

ஊருக்கே
ராஜாவானாலும்
நீ
எனக்குப் பிள்ளையே!

உன்னருகிலேயே 
நான் இருக்க
சமயபுரத்தாளை
வேண்டுகிறாயா?"

கோபம்
கொப்பளித்தது
தேவியிடம்.

மன்னர்
படுக்கையிலிருந்து
துள்ளி எழுந்தார்.

யோசித்துப் பார்த்தார்.

அரண்மனை அருகே
மாரியம்மன்
கோயில்
இல்லை.

அருகிருக்கும்
மாரியம்மன் கோயில்
பற்றி
அறிந்து வர
அப்போதே
ஆட்களை அனுப்பினார்.

எங்கும்
தென்படவில்லை
ஓங்காரியின்
உறைவிடம்.

தானே
தேட ஆரம்பித்தார்
மன்னர்.

தஞ்சை அருகே
ஓர் அடர்ந்த காடு.

அங்கே
ஒரு புற்றில்
குழந்தைகள்
வேப்பிலை வைத்து
விளையாடுவதாகத்
தகவல் கிடைத்தது.

மன்னர்
ஆவலுடன் போனார்.

அங்கே
கோயிலுக்கான
அறிகுறி இல்லை.

மனம்
ஒடிந்து போனார்
மன்னர்.

ஓரத்தில்
ஒரு நிர்வாண சாமியார்
நிஷ்டையில் இருந்தார்.

அவர்
சாட்சாத்
நம் பிரம்மேந்திரர் தான்.

காத்திருந்து
அவர்
கண் விழித்தபோது
வணங்கி
கண்ணீருடன்
வேண்டுதல் வைத்தார்.

'சுவாமி...!
வேப்பிலைக்காரியைக்
காண்பித்தருள
வேண்டும்.

அம்பாள் கோயிலை
அடையாளம்
காட்ட வேண்டும்.'

மௌன சுவாமி
'அப்புற்றே தான்
அம்பாள்' எனக்
குறிப்பால் உணர்த்தினார்.

மன்னர் அதிர்ந்தார்.

'சுவாமி...!
கோயில் வேண்டும்!
அம்மன் வேண்டும்!

அவள் கோபக்காரி.
ஆவன செய்யுங்கள்.
வழிபட வேண்டும்.
வழிபாடு நிதம்
நடக்க வேண்டும்.

என் மகள்
பூரண குணமடைய
வேண்டும்.

எதிர்காலத்தில்
எம் மக்கள்
வழிபடக் கோயில்
வேண்டும்.

தங்கள் அருளால்
அம்மன் சிலையை
உருவாக்கித் தாருங்கள்'
திருவடி பற்றி
உருகி நின்றார்.

'அவ்வளவு தானே!'
என்கிற மாதிரி
பார்த்த
பிரம்மேந்திரர்
சாம்பிராணி
புனுகு
ஜவ்வாது
கஸ்தூரி
கோரோசனை
அகில்
சந்தனம்
குங்குமப் பூ
பச்சைக் கற்பூரம்
கொண்டு வரச்
சொன்னார்.

அவற்றை
அந்த
புன்னை வனப்
புற்று
மண்ணில்
பிசைந்து
அம்மனை
உருவாக்கினார்.

பார்த்திருந்த
மன்னரும்
படையும் 
நெஞ்சுருகிப் 
போனார்கள்.

அப்படி ஒரு
அம்பாள் சொரூபம்
அவனியில் இல்லை
என
அவர்கள் உள்ளம்
துள்ளிக் குதித்தது.

'இங்கு
வழிபட்டால்
குழந்தைகள்
குணமடைவர்'
என்பதைக்
குறிப்பால் 
உணர்த்திவிட்டு
நடையைக் கட்டினார்
பரதேசி
போலிருந்த
பரமஞானி.

அப்புறமென்ன?

அரசர்
குழந்தையை
அம்மன் முன் வைத்து
கண்ணீர் சொரிந்து
வழிபட
கண் நோய்
அக்கணமே
காணாமல் போனது.

அரசரைத்
தொடர்ந்து
தஞ்சை மக்களும்
தமிழக மக்களும்
தேடி வந்து
தொழும்
சக்திமிக்கக் கோயிலாக
அக்கோயில் 
உருவெடுத்தது.

இன்று வரை 
நாடி வரும்
கோடிக்கணக்கான 
பக்தர்களைக்
கண்ணும் 
கருத்துமாக 
காத்து வருகிறது.

அக்கோயில் 
எது தெரியுமா?

பெயரைச் சொன்னால் 
பிரமித்துப் போவீர்கள்.

அக்கோயில் தான்
அருள்மிகு 
புன்னைநல்லூர் 
மாரியம்மன்
திருக்கோயில்.

ஓம் நமசிவாய!

 (பாகம் - 5 - தொடரும்)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)