சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 3)

 


கருவூரார் (பாகம் 3)

-மாரிமைந்தன் சிவராமன்

சைவர் வைணவர் போற்றும் கருவூரார்


கருவூராரின்
சித்துக்கள் 
சித்தர் உலகின் 
பெருமை சொல்வன.

தேச 
சஞ்சாரத்தின் போது 
திருக்குருகூர்
சென்றார் கருவூரார்.

திருக்குருகூர்
இன்றைய 
திருநெல்வேலி.

நெல்லையப்பர் 
ஆலயத்திற்குச்
சென்றார்
நம் சித்தர். 

அவர் சென்ற நேரம் 
கோயில் ஏனோ 
ஆட்கள் யாருமின்றி
வெறிச்சோடி இருந்தது.

கோயில் வாசலில் 
நின்றபடி
'நெல்லையப்பா...
நெல்லையப்பா..
என்று
உரக்க அழைத்தார். 

பதில் வரவில்லை.
மீண்டும்
இறைவனை 
அழைத்தார். 

மீண்டும் ஒரு முறை.
இது மூன்றாம் முறை. 

ஊஹூம்...
கருவூராரின்
குரல் தான் 
எதிரொலித்தது. 

பதில் இல்லை. 

கோபம் 
வந்தது சித்தருக்கு.
கூடவே 
வேகமாய்
சாபமும்
வெளி வந்தது. 

"பச்...
இங்கு
இறைவன் 
இல்லை போலிருக்கிறது!
அதனால் தான்
பதில் வரவில்லை. 

நெல்லையப்பா...!
 நீ 
இல்லையப்பா...!

நல்லவர்கள் 
இல்லாத இவ்விடத்தில் 
எருக்கு முளைக்கட்டும். "
என்று சாபமிட்டவாறு
வெளியேறினார் 
கருவூரார். 

அவர் 
அடுத்த அடி 
வைப்பதற்குள்
ஊரெங்கும் 
எருக்கஞ் செடிகள்
விரைந்தெழுந்து சீறின.

அடுத்து 
கோபம் குறையாமல்
அருகிருந்த
மானூர் போனார். 

அங்கேயும் 
ஒரு குழப்பம். 

அந்த ஊர் வேதியர்
கருவூராரை 
ஆச்சாரம் அற்றவர்
என இகழ்ந்தனர்.

ஊரில்
வீடில்லாமல் 
போகட்டும் 
என
சாபமிட்டார்.

அடுத்த நொடியே
ஊர் உரு இழந்தது.

அதற்குள் 
கருவூராரைத் தேடி
மானூருக்கு 
நேரடியாகவே 
வந்து விட்டார் 
உலகாளும்
நெல்லையப்பர். 

"ஏப்பா...
நைவேத்திய
நேரத்தில்
அழைத்தால் 
எப்படி என்னால் 
பதில் தர முடியும். 

நீ வந்த 
நேரம் தான் எனக்கு 
நைவேத்தியம் நடந்து கொண்டிருந்தது.

யோசித்துப் பார்! 
கோபம் கொள்ளாதே!
திரும்பு
திருநெல்வேலிக்கு!

கோபம் வந்தால்
நெற்றிக்கண் காட்டும்
முக்கண் நாயகனே-
அதர்மமாய் இருந்தால்
சர்வ சாதாரணமாக 
சாபம் தரும்
சர்வேஸ்வரனே-
கருவூராரின் 
கோபத்தையும் 
சாபத்தையும்
எதிர்கொள்ள 
அஞ்சினார்.

அதனால்
இறைவனே 
இறைஞ்சினார்.

தெய்வமே
தேடி வந்ததால்
தெய்வீக சித்தர்
மறுமொழியின்றி
திருநெல்வேலி 
திரும்பினார். 

அப்போது
கருவூர் சித்தரின்
காலடி 
ஒவ்வொன்றுக்கும்
ஒரு பொற்காசு
தோன்ற வைத்து
கருவூராரை
சிறப்பித்தாராம்
நெல்லையப்பர். 

சித்தர்
மனம் 
குளிர்ந்ததும் 
எருக்கஞ் செடிகள்
மறைந்து போயின. 

இப்படி
மகேசுவரன் 
மதிப்பளித்து
வரவேற்ற 
கருவூராரின் மகிமை
இன்று வரை
மறையாமல் 
இருக்கிறது. 

கருவூர்ப் புராணத்தில் 
காணப்படும்
ஒரு குறிப்பில்
தெய்வீக மணம்
கமழ்கிறது.

கருவூரார்
நெல்லையப்பர்
கோவிலுக்கு 
வரும் முன்னர்
திருக்குருகூர்
சென்றார்.

அவ்வூருக்குள்
நுழைந்தபோது 
பலத்த வரவேற்பு 
இருந்தது. 

பாகவதர்கள் பலர்
எல்லைக்கு வந்து 
வரவேற்பளித்தனர். 

கருவூரார் 
விசாரித்த போது
"முந்தைய நாள்
கனவில்
ஸ்ரீமன்
நாராயணனே 
காட்சியளித்து
உங்களை
வரவேற்கச்
சொன்னார்"
என்று கூறி 
பரவசப்பட்டனர் 
பாகவதர்கள். 

"மாதவன் 
எங்கள்
கனவிலாவது
வந்து
தரிசனம் தந்தது
தங்கள் வருகைக்காகத் தான்! "
புளகாங்கிதம் அடைந்தனர்
வைணவ குலத்தினர்.

அவர்கள்
உபசரிப்பில்
கருவூரார்
உவகை 
கொண்டார். 

'திருக்குருகூர்
தெருவில் 
திரியும்
நாய்களும் 
சொர்க்கம்
பெறுக!'
என 
அருள் தந்தார். 

மா தவம்
செய்த
மகா சித்தரை
மாதவன் 
கட்டியம் கூறிய
மா ஞானி 
எனப்
போற்றி
மகிழ்ந்தனர் 
அவ்வூர் ஆன்றோர்.

நம்மாழ்வார் 
அவதரித்த 
திருத்தலமான
திருக்குருகூர்
வாழ் வைணவ
பாகவதர்கள்
நெஞ்சில் நிறைந்த 
கருவூரார்தான்
சைவர்கள் வணங்கும்
ஆதி முதல்வனின்
அன்பிற்குரியவர்.
தஞ்சையிலும் 
சிதம்பரத்திலும்
நெல்லையிலும்
சிவ முத்திரை பதித்தவர்.

திருப்புடைமருதூரில்
அடுத்து நடந்த நிகழ்வும்
அற்புதமானது.
தெய்வாம்சம் கொண்டது.

திருப்புடைமருதூர்
கோயிலில் 
அருளாட்சி புரியும்
சிவனாரை
அழைத்து 
கருவூரார் குரல்
கொடுத்தார். 

நல்லவேளை 
நெல்லையப்பர் 
போல
நைவேத்தியத்தில் 
இறைவன் 
இருக்கவில்லை. 

அதனால் 
கருவூரார்
கோபம் அறிந்த
இறையனார்
தலையைச்
சிறிது சாய்த்து 
உற்றுக் கேட்டு
பதில் கொடுத்தார். 

இன்றும்
அங்கு 
கொலு வீற்றிருக்கும்
நாதரான 
நாறும்பூநாதர் 
தலை சாய்ந்தபடியே
இருப்பதைக்
கண்டு வணங்கலாம். 

நாறும்பூநாதரை
கருவூரார் புகழ்ந்து 
பாடுவதை
இறையனார் மெய்மறந்து
கேட்டு ரசித்து
கருவூராரை அழைத்தார்.

இடையிலே 
தாமிரபரணி
கட்டுக்கடங்காமல் 
கரைபுரண்டு 
ஓடிக் கொண்டிருந்தது.

இறைவன் 
அழைப்பை 
கருவூரார் 
மறுப்பாரா ?

தாமிரபரணி 
நதி மீது 
நடந்து செல்ல
முயன்றார்.

இடையூறின்றி 
தாமிரபரணியே 
வழிவிடும் 
அதிசயம் அரங்கேறியது. 

நதி நீர் மீது 
நடப்பதும்
நதியே
வழிவிடுவதும் 
சித்தர்களுக்கு
இறையருள் 
தந்த சித்தி. 

தாமிரபரணி 
ஆற்றங்கரையில் 
கருவூரார் 
நின்று பாடிய 
படித்துறை 
கருவூரார் சித்தர் படித்துறை 
என்னும் 
பெயரில்
இன்றும் உள்ளது. 

ஆலயத்தின் 
வடக்கு வாசலுக்கு 
கருவூரார் வாசல் 
என்று பெயர். 

கருவூராருக்கென 
தனிச் சிலை 
கோயினுள்ளே
கம்பீரமாகக்
காட்சியளிக்கிறது.

கஜேந்திர மோட்சம்
என்னும்
திருத்தலம்
கருவூராரின்
சித்தத் தன்மையை 
வெளிச்சமிட்ட 
தெய்வத்தலம்.

இன்றைய 
பாப்பாக்குடியே
கஜேந்திர மோட்சம். 

ஒருமுறை 
அங்கு சென்ற 
கருவூரார்
இறைவன்
முன்றீசரை 
அழைத்தார். 

உடனே வந்தார் 
முன்றீசர்.

மது வேண்டும்
எனக் கேட்டார் 
கருவூரார். 

இறைவன் 
புன்னகைத்தார்.

காளியை 
அழைத்து
கள் கொடுக்கச் 
சொன்னார்.

மதுக் குடத்தோடு 
வந்தாள் காளி.
தந்தாள்.

 "அடுத்து?"
 இறைவன்
 கேட்டார்.

 "மீன் வேண்டும்"

இறையிடமே 
கட்டளை
போட்டார். 

காளிக்கு
கொஞ்சம் கோபம். 

ஆயினும் 
அருகிலிருக்கும் 
முன்றீசருக்காக
மீன்தேடினாள்.
கிடைக்கவில்லை.

அருகிலிருந்த 
ஊர்வாசிகளைக் 
கேட்டாள்.

"மீன் 
கிடைப்பது அரிது "
எனக்
கை விரித்தனர்
அவர்கள். 

பதில் சொல்ல முடியாமல்
காளி
கை பிசைந்தாள்.

இறைவனுக்கும்
அதிர்ச்சி. 

கருவூரார்
சிரித்தபடி
அருகிலிருந்த
வன்னி மரத்தை 
நோக்கினார். 

மரத்திலிருந்து 
வண்ண வண்ண
மீன்கள் 
துள்ளி விழுந்தன. 

ஆம்...
மீன் மாரி
பொழிந்தது.

உலக ஜீவராசிகள் 
அனைத்தும் 
படைத்த
இறைவன்
இறைவி
முன்னர்
கருவூரார் 
காட்டிய 
சித்த மகிமை இது. 

இதை
வேறு விதமாகவும் 
சொல்கிறார்கள். 

கர்ம யோகிகள் சிலர் 
கருவூராரைக் 
கண்டபோது 
அவர்களுக்கு நிகழ்த்திக் 
காட்டிய நிகழ்வு 
இது என்கிறார்கள். 

அவர்கள்
இறைவனுக்கு
மீனும் மதுவும் 
படைத்திருக்க ...
"முயற்சிக்காமல் ...
இவை கிட்டுமா?"
எனக் 
கருவூரார் கேட்டாராம். 

"அதெப்படி 
சாத்தியம் ?"
எனக்
கேலி செய்தனர்
கர்ம யோகிகள். 

அதற்கே 
கருவூரார் 
காளியை அழைத்து
கள்ளையும்
வன்னியையும் நோக்கி 
மீன்களையும்
வரவழைத்தாராம். 

கர்ம யோகிகள் 
கருவூரார்
காலில் விழுந்து 
வணங்கி
வீடுபேற்றை 
அடைய
வழி சொல்லுங்கள்"
எனத் 
தங்கள் தேடலை
விண்ணப்பிக்க,

"பொதிகை மலை 
செல்லுங்கள். 
வைத்த கண்
வாங்காமல்
ஆகாயத்தைப்
பாருங்கள். 

நீல வண்ணம்
தெரியும்.
ஆகாயம் 
அம்பிகையின் 
வடிவம். 

வெண்மை 
மேகங்கள் 
கலைந்த பிறகே
கடல்
நீல நிறம் அடையும். 

நீல நிறம் 
எண்ணங்களை நீக்கும். 
ஆசைகளை அகற்றும்.
ஞான உபதேசங்கள் 
அப்போதே 
கருத்தினில் ஏறும் .
எல்லாம் கைகூடும்.. 

கர்ம யோகிகள் 
கருவூரார்
உபதேசத்தை
சிந்தையில் ஏற்று
பொதிகை மலை
சென்றதாக
வரலாறு. 

ஓம் நமசிவாய!

(பாகம் 4 - தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)