சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 2)
கருவூரார் (பாகம் 2)
-மாரிமைந்தன் சிவராமன்
அரங்கனின் சாட்சியும் - போகரின் ஆசியும்
திருவரங்கத்தில்
அரங்கனே
கருவூராருக்கு
சாட்சி சொன்ன
சரித்திரம்
சுவாரசியமானது.
அது அபரஞ்சி
என்ற மாது
தொடர்புடையது.
போகரின்
ஞானவழித் தோன்றல்
கருவூராருக்கு
பெண் இன்பம்
பேரானந்தம்.
போகருக்கு
மனைவியர்
எத்தனை என்பதே
ஒரு சித்த ரகசியம்.
எண்ணியவர்
தோற்றுப் போய்
மீண்டும் மீண்டும்
எண்ணினாலும்
விடை மட்டும்
கிடைக்காது.
கருவூராரும்
அப்படியே.
அவருக்கு
மனைவிமார்
12 பேர்
என்று
ஒரு கணிப்பு
உள்ளது.
பொதுவாய்
சித்தர்களுக்கு
மனைவியர்
அதிகம்.
அவர்கள் உறவு
ஞான நிலை
என்பார்கள்
சித்தாடல்
அறிந்தவர்கள்.
எனவே
மேலோட்டமாய்ப்
பார்த்து
கதையளப்பது தவறு.
சித்தர்கள்
இன்ப நிலை
காண்பதில்லை.
மனம் அப்போதும்
ஜீவராஜ
யோக சமாதி
என்னும்
நிலையிலிருக்கும்.
இந்த கருத்தோடு
கருவூரார்
திருவரங்கம்
வந்தபோது
நடந்த கதையைத்
தரிசிப்போம்.
திருவரங்கத்தில்
திருவரங்கனைத்
தரிசித்த நேரத்தில்
அபரஞ்சி என்ற
ஆரணங்கைப்
பார்த்தார் கருவூரார்.
அவள்
அழகி... பேரழகி.
அரங்கனின்
சேவைக்குத்
தன்னை
அர்ப்பணித்தவள்.
ஆடல் கலையால்
எவரையும்
ஈர்ப்பவள்.
அதே சமயம்
ஞானத்
தேடல்கள்
நிரம்பக்
கொண்டவள்.
கூர்த்த மதிக்காரி.
பார்த்த மாத்திரத்தில்
மனதைக் கிள்ளுபவள்.
அக்கால
வார்த்தைகளில்
கூறினால்
அவள் ஒரு
தாசி.
தேவதாசி.
அவள்
ஞான அருள் பெட்டகம்
கருவூராரைப் பார்த்தாள்.
அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்
கதை தான்.
கட்டழகில்
இருவருமே மயங்கிக்
கலந்தார்கள்.
மோகனச் சிறையில்
மௌனராகம்
நீண்டு ஒலித்தது.
இருவரின் பார்வைகளும்
கலந்த பின்னர்
இரு மனங்களும் கலந்தன.
அன்று இரவே
ஜீவ ராஜ யோக
சமாதி நிலையில்
இருவரும் சங்கமித்தனர்.
பிரமித்தாள் அபரஞ்சி.
புதிய அனுபவத்தில்
பூரித்துத் திளைத்தார்
கருவூரார்.
பிரியும் நேரம் ....
கேள்விகள் பல
கேட்டாள்
அபரஞ்சி.
அத்தனையும்
ஞானம் மிகுந்தவை.
ஞான தானமும்
தந்தார் கருவூரார்.
அவளை
கரூவூராருக்கு மிகவும்
பிடித்துப் போனது.
"நீ ...
வித்தியாசமானவள்..."
அதிசயித்தார்.
மறுநாள்
அரங்கனைத்
தரிசிக்க
கோயிலுக்குச்
சென்று
ஒரு நவரத்தின
மாலையோடு
வீடு திரும்பினார்.
அபரஞ்சிக்கு
அந்த
நவரத்தின மாலையைச்
சூட்டி மகிழ்ந்தார்.
"அடுத்து
எப்போது? "
அபரஞ்சி கேட்டாள்.
"நீ
விரும்பும் போது...
மனமுருகி அழை
அடுத்த நொடி
வருவேன்
தேனீயைப் போல்..."
ஆறுதலாய்
தலை கோதி
விடை பெற்றார்.
அடுத்த நாள்....
திருவரங்கனுக்கு
வழிபாடு
நடைபெறும் நேரம்.
"அரங்கன்
அணிந்திருந்த
ரத்தின மாலையைக்
காணவில்லை. ..."
அலங்கரிக்க வந்தவர்
ஓங்கிக் கத்த
அனைவரும்
அதிர்ந்தனர்.
"நாட்டுக்கே
ஆபத்து..."
அந்தணர் கூவினர்.
அப்போது
ஏதுமறியா
ஏந்திழை
அபரஞ்சி
அங்கு வந்தாள்.
அடடா....
காணாமல் போன
ரத்தினமாலை
அபரஞ்சி
மார்பில்
அழகு கூட்டி
ஜொலித்துக்
கொண்டிருந்தது.
"அபரஞ்சி
திருடியிருப்பாளா ..?"
ஒரு கூட்டம்
யூகம் சொன்னது.
"காமுகன் எவனாவது
காதலாகி
களவாடித் தந்திருப்பான்..."
வாய்ப்பில்லா கூட்டம்
வாய் மென்றது.
ஊர் கூடியது.
ஊர் தலைவர்
விசாரித்தார்.
நடந்ததைச்
சொன்னாள்
அபரஞ்சி.
"இந்த
பள்ளிகொண்டான்
சாட்சியாக
சித்தர்
கருவூரார்
தந்தார் "
சத்தியம் செய்தாள்
அபரஞ்சி.
"இங்கு
பள்ளி கொண்டவரா...?
உன்னோடு நேற்றிரவு
பள்ளி கொண்டவரா...!"
"அந்த
பெண் பித்தனா !
கருவூரார் சித்தனா?"
ஆளாளுக்கு
வார்த்தைகளால்
அடித்து நொறுக்கினர்.
துடித்த
அபரஞ்சியிடமிருந்து
மாலையைப் பறித்தார்
ஊர்த் தலைவர்.
வீடு திரும்பிய
அபரஞ்சிக்கு
துன்பம் ஏதுமில்லை.
பக்குவம் பெற்றிருந்தாள்.
அவள்
ஒரு
யோகி போல்
தவம் கொண்டாள்.
ஊர்த் தலைவர்
ஏற்பாட்டில்
அவள் வீட்டில்
காவல்
காத்திருந்தது.
தவத்தில்
கருவூராரை
நினைத்து
மனமுருகி
வேண்டினாள்
அக்கணமே
கருவூரார்
பிரசன்னமானார்.
உடன்
காவலர்களால்
கைதானார்.
மறுநாள்
கோயில் அதிகாரி
விசாரித்தார்.
"கருவூராரே!
உங்களுக்கும்
இவளுக்கும்
என்ன தொடர்பு?
"என் சீடர் "
பெருமிதமாய்
சொன்னார்
கருவூரார்.
"கோயில்
சொத்தைத்
திருடலாமா?"
"இல்லை
அப்பனே!
நீ
நினைப்பது தப்பு.
இவள்
ஒரு சிறந்த பக்தை.
பரிபக்குவ
நிலையை
அடைந்த
தவமணி.
அரங்கன் தான்
தன்
ரத்தினமாலையைக்
கொடுத்து
பரிசளிக்கச்
சொன்னான்"
கணீரென்று
சொன்னார்
கருவூரார்.
"அரங்கன்
முன்னால்
இப்படி
சொல்லி
நிரூபிப்பீரா? "
கிடுக்குப் பிடி
போட்டார்
கோயில் அதிகாரி.
"தாராளமாய்! "
தலை ஆட்டினார்
கருவூரார்.
கோவில் முன்னே
பெருங்கூட்டம்.
'அரங்கன் முன்
சித்தர்
பொய் சொல்ல
முடியுமா? '
காத்திருந்தது
கூட்டம்.
"பெருமாளே!
இந்த
மாலையை
என்னிடம்
தந்து
அபரஞ்சியிடம்
கொடுக்கச்
சொன்னது
உண்மையா
இல்லையா!
உங்கள்
சாட்சியே
உண்மை
உரைக்கும்.
"வாருங்கள்! வாருங்கள் !!
சாட்சியம் தாருங்கள்!"
உணர்ச்சிக் குரலாய்
வெடித்தது சித்தர் குரல்.
பதிலாய்
ஓர் அசரீரி ஒலித்தது...
அது
அரங்கன்
குரலாய்
இருந்தது.
"பக்தர்களே!
நீங்கள் எனக்கு
அலங்காரம்
செய்து
அழகு பார்ப்பது போல
என் பாராட்டுக்குரிய
அடியார்களை
அழகு படுத்தி பார்ப்பது
என் வழக்கம்.
அந்த வகையில்
அபரஞ்சி
என் அன்பு
பக்தை.
அதனால்
கருவூரார்
மூலம்
ரத்தினமாலையைக்
கொடுத்தனுப்பினேன்!"
விண்ணதிர
எழுந்தது
அசரீரி.
அதை
அரங்கன்
குரலென
அனைவரும்
உணர்ந்தனர்.
கருவூரார்
பெருமையையும்
அபரஞ்சியின்
அருமையையும்
அவர்களுக்காக
அரங்கன் குரலே
அசரீரியாக ஒலித்ததையும்
உணர்ந்த மக்கள்
'ரங்கா ...ரங்கா...'
என ஓதிய வண்ணம்
தரை விழுந்து
வணங்கினர்.
கருவூரார்
கருணையினால்
அரங்கனின்
குரல் தரிசனம்
கிடைத்ததாகச்
சொல்லி
மகிழ்ச்சி கூச்சலிட்டு
பரவசத்தோடு
வணங்கி நின்றனர்.
அரங்கனின் சாட்சி
அபரஞ்சிக்கு
கருவூரார் வாயிலாக
கிடைத்த மாட்சி.
ரத்தினமாலையை
அவளிடமே
திரும்பக் கொடுக்க
ஊர்த் தலைவர்
பரிந்துரைத்தார்.
"வேண்டாம்...
வேண்டாம்...
அதற்குரியவர்
அரங்கனே. ."
அபரஞ்சி
மறுத்தாள்.
அவளுக்கெதற்கு
ரத்தின மாலை...?
அவளே
ரத்தினமாய்
ஜொலித்தாள் !
திருவரங்கமே
பிரகாசித்தது.
அரங்கனின் சாட்சி
கருவூராருக்கு கிடைத்த
மாட்சி என்று
சித்தர் பிரான்களின்
திவ்விய சரித்திரம்
சித்த வல்லமையோடு
பெருமிதம் கொண்டது.
அடுத்து நடந்த
ஒரு நிகழ்வு
போகர் பெருமானின்
பேரன்பையும்
பெரும் பாராட்டையும்
பெற்றுத் தந்தது.
அதுவும்
பெண் தொடர்புடையதே.
பெண் தேடுவதில்
குரு போகரைப் போல்
வல்லவர் கருவூரார்.
ஏற்கனவே
குருவுக்குப்
பெண் தேடிய
அனுபவம்
அவருக்கு உண்டு.
ஒரு சமயம்
திருஈங்கோய்
மலையிருந்தபோது
உடன் இருந்த
கருவூராரையும்
கொங்கணரையும்
அழைத்தார்
போகர் பிரான்.
இரு சித்தர்களும்
குரு பக்தியோடு
போகரை வணங்கி
அவர் ஏவலுக்காக
காத்து நின்றனர்.
"நீங்கள்
இருவரும் சென்று
எனக்காக
ஒரு அழகிய பெண்ணை
கொணர்க!
கட்டளையிட்டார்
குரு போகர்.
இது ஒரு வகை
பரீட்சை.
குருவிற்கேற்ற
பெண்!
அவர் மனதிற்கேற்ற
பெண்!
அவர் திறனுக்கேற்ற
பெண்!
மூவுலகிலும்
தேடினர்
சீடர்கள்
கிடைத்தபாடில்லை.
களைத்துப் போய்
ஒரு
கானகத்தில்
தென்பட்ட
பழைய மண்டபத்தில்
ஓய்வெடுக்க
நுழைந்தார்கள்.
அங்கே
ஒரு
அழகிய சிலை
பெண் சிலை.
'இவளைப்
போல்
பெண்ணிருந்தால்
குருவுக்கு
பிடிக்குமோ !'
இருவருமே
ஒரே மாதிரி
நினைத்தார்கள்.
கொங்கணர்
வேடிக்கையாய்
சிலையை
அழைக்கச் சொன்னார்.
கருவூரார்
கையசைத்து
"வா ...வா...
பெண்ணே..!"
என்றார்.
என்ன ஆச்சரியம்..!
கற்சிலை நகர்ந்தது.
பொற்சிலை போல்
பேரழகியாய்
அருகில் வந்தது.
சீடர்களுக்குத்
திருப்தி.
அந்தப் பெண்ணே
குருவுக்கு
ஏற்ற பெண்ணென
குருவிடம்
அழைத்துச் சென்றனர்.
மோக மிகுதியில்
காம வயத்திலிருந்த
போகர் பெருமான்
சீடர்கள்
அழைத்து வந்த
கன்னிப் பெண்ணுடன்
இன்பம் துய்க்கலானார் .
பெண் சுகத்தில்
வல்லவருக்கு
ஒரு கணத்திற்குள்
சிலிர்ப்பு தளர்ந்தது...
இவளென்ன
இப்படி இருக்கிறாள்... !
உணர்ச்சியே இல்லாமல்...
கல் போல்...!
உடனே
சீடர்களை அழைத்தார்.
எங்கே
பிடித்து வந்தீர்கள்?
நடந்ததைச்
சொன்னார்கள்.
குருவடி விழுந்தார்கள்
தப்பு நேர்ந்ததற்கு
மன்னிக்க வேண்டினர்.
"அதானே பார்த்தேன்...
சிவனுக்கும்
சிவலிங்கத்திற்கும்
பேதம் தெரியாதவனா
நான்...?
இருப்பினும்
வாழ்க
உமது திறமை!
வளர்க
உம் வல்லமை !
சிலைக்கு
உயிர்
கொடுத்த
சித்தர்களே!
நீவிர்
வாழ்க!"
குருநாதர் போகர்
வாழ்த்தினார்.
ஆசி தந்தார்.
சித்தர்கள்
குருவின்
வாழ்த்து மழையில்
நனைந்த படியே
'தப்பித்தது
தம்பிரான் புண்ணியம்'
என
திருவடியை வணங்கி
மகிழ்ந்தனர்.
சித்தர் பிரான்களின்
சரித்திரங்கள்
பெரும்பாலும்
தகுந்த ஆதாரங்கள் இன்றி
செவி வழிச் செய்தியாகவும்
கருணபரம்பரைக் கதையாகவும்
இருப்பதால்
கருவூரார்
கொங்கணர் துணையுடன்
போகருக்குப் பெண் தேடும் படலத்தை
ஏற்பவர்கள் ஏற்கலாம்.
அல்லது
கடந்தும் செல்லலாம்.
ஓம் நமசிவாய!
(பாகம் 3 - தொடரும்)
நல்ல கோர்வையும் தேர்ந்தெடுத்த சொற்களும் மிக அருமை !
பதிலளிநீக்கு