சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 2)

 


சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 2)

-மாரிமைந்தன் சிவராமன்

"ஈஸ்வர
சொரூபங்களுக்கு 
எல்லாம்
அதிபதியே
சதாசிவம்.

சதாசிவத்துடன்
இணைந்திருப்பவள்
உலகாளும்
உமையவள்
மனோன்மணி.

அவளே
சித்தர்கள்
வணங்கும் 
சீரிய தெய்வம்.

அவள்
கருணையின்றி
உயர்நிலை
உய்ய முடியாது"
என
சதாசிவ - மனோன்மணி
பெருமைகளை
எடுத்துக் கூறி
சீடருக்குப்
பெயர் சூட்டினார்
குருநாதர் பரமசிவேந்திரா
சரஸ்வதி.

பின்னாளில்
யோக ஞான 
சித்திகளில்
சிறந்து
உலகாளப் போகும்
சீடருக்குச்
சதாசிவம்
எனப்
பெயரிட்டது
வீண் போகவில்லை.

நாடு போற்றும்
வல்லவராகவே
வல்லமை
நிறைந்தவராகவே
வலம் வந்தார்.

அரிய
சித்தாடல்கள் புரிந்து
உயரிய ஒப்பற்ற
சித்தராகவே
உலா வந்தார்.

குரு வழங்கிய
சதாசிவன்
என்ற திருநாமத்திற்கு
ஒப்ப
நாள் முழுதும்
வாழ்நாள் முழுதும்
சிவ சிந்தனையிலேயே
ஒடுங்கியிருந்தார்.

நிறை நாள் 
நிறை நொடிவரை
'சிவ சிந்தனையே
அவர் உலகம்.
சதா காலமும்
சிவ...சிவ...
என்றே
சிறந்திருந்தார்.

சதாசிவ
பிரம்மேந்திரரின்
திவ்விய வாழ்வில்
அவர்
கேட்ட
'ஒரு சொல்'
'ஒரு நொடியில்'
அவரது
வாழ்க்கைப் பாதையை
ஆன்மிக
லயப்படுத்தியதைத்
தரிசிக்கலாம்.

அன்னை
'பொறு'
பசி அடக்கச்
சொன்னது. 
ஒரு நொடியில்
பாதை மாறியது.
பசி விடுத்தார்.

அடுத்து 
அவர் கேட்ட 
சொல்
'வாயடக்கு'.
இது
குருநாதர்
கட்டளையிட்ட
ஒரு சொல்.

இச் சொல்
சதாசிவ
பிரம்மேந்திரரின்
ஆன்மிக
வாழ்விற்கு
உரமூட்டியது.
மெருகேற்றியது.

அன்று
அதே நொடி
பேச்சை
நிறுத்தியவர்
பின் எப்போதும்
மாந்தரிடம்
பேசவே
இல்லை.

ஒரு
சொல் கூட
உதிர்க்கவில்லை.

எப்போதும்
இறையுடன்
பேசும்
அவரிடம் இருந்து
சில சமயம்
உதட்டசைவாய்
சற்று
ஒலித்ததுண்டு.

அது...
'சிவ...சிவ'.

இத்தனைக்கும்
சதாசிவ
பிரம்மேந்திரர்
சங்கீத ஞானம்
நிறைந்தவர்.

இறையருளைக்
னிந்துருகிப் பாடி
இறைவனையே
மீண்டும்
கேட்க
ஏங்க வைப்பார்.

அவர்
மௌனியாக
ஆன
நிகழ்வு
ஆன்மிக
அதிர்வு
கொண்டது.

ஒரு சமயம்
மைசூர் மன்னனுக்கு
ஓர்
அருள் நிறைந்த
ஆஸ்தான வித்வானின்
தேவை இருந்தது.

வித்வான் தேடலில்
பரமசிவேந்திராள்
உதவி தேவைப்பட்டது.

குருநாதர்
பரமசிவேந்திராள்
சாதாரணர் இல்லை.

அவர்
காஞ்சி காமகோடி
பீடத்தின்
57-வது பீடாதிபதி.

அவரின்
பார்வைக்கு
அரசரெல்லாம்
காத்திருப்பது வழக்கம்.

மைசூர் மன்னன்
பரமசிவேந்திராளைத்
தரிசித்துக்
கோரிக்கை
வைத்தான். 

தக்கதொரு
ஆஸ்தான வித்வான்
வேண்டுமென்று
வேண்டி நின்றான்.

அது சமயம்தான்
கலைகள்
பற்பல கற்று
பிரம்ம ஞானம்
கற்றுத் தேர்ந்து
மடம் எங்கும் 
புகழ் பரப்பிக் 
கொண்டிருந்தார் 
சதாசிவ பிரம்மேந்திரர்.

மைசூர்
மன்னரின்
வேண்டுகோளை
ஏற்று
சீடனை
மைசூருக்கு
அனுப்பி வைத்தார்
குருநாதர்.

குரு சொல்லை
ஏற்று
மறுப்பின்றிப்
பயணமானார்
மைசூர் நாட்டிற்கு.

மைசூர் அரண்மயிைல்
சதாசிவனாரின்
ஞானக் கொடி
பட்டொளி 
வீசிப் பறந்தது.

அரசனின்
எல்லாவற்றுக்கும்
எதற்கும்
பிரம்மேந்திரரே
பிரதானமாக
இருந்தார்.

'பேச்சாற்றல் மிக்கவர்
சொல்லின் செல்வர்'
என்று மன்னன்
மட்டுமல்ல
மைசூரே
கொண்டாடியது.

கொண்டாட்டம்
வரும்போது
திண்டாட்டமும்
வரும் தானே! 
வந்தது!

பிரம்மேந்திரரின்
புகழ்
ஏற்கனவே
அவையில்
கோலோச்சிக்
கொண்டிருந்த
சிலருக்குக்
காழ்ப்பைத் தந்திருந்தது.

பொறாமைப்
பேச்சுகள்
கொட்டமடிக்க
ஆரம்பித்திருந்தன.

போதாக்குறைக்கு
எதிலும்
நிறை விரும்பும்
சதாசிவ
பிரம்மேந்திரர்
அரசனை
நாடி வந்து
புகழ்ந்து பாடிப்
பரிசில் பெற
வருவோரைக்
கேள்விகளால்
திணறடித்தார்.

பரிசில்களை
நிர்ணயிக்கும்
பொறுப்பில்
இருந்த
பிரம்மேந்திரர்
'அரசர்
தந்தாலும்
இவர்
தர விடமாட்டார்'
எனும் 
அவப்பெயர்
பெற்றார்.

தஞ்சாவூர்
சாஸ்திரி
ஒருவர்.
பெயர்
கோபாலகிருஷ்ண
சாஸ்திரி.

விபரமானவர்.
கூடவே
வில்லங்கமானவர்.

மைசூர்
சமஸ்தான
வித்வான்
பதவி மீது
அவருக்கு
வெகுகாலமாக
ஒரு கண்.

எப்படியாகிலும்
சதாசிவனாரை
வென்று
சமஸ்தான
வித்வானாக
வேண்டுமெனத்
துடித்தார்.

மைசூர்
வந்தார்.

போராடி
ஜெயிப்பதை விட
துதிபாடிக்
கெடுக்கலாம்
என
முடிவெடுத்தார்.

சமஸ்தானம்
வந்தவர்
சதாசிவத்தின்
பாதங்களில்
சரணடைந்தார்.

'பணி செய்யக்
காத்திருக்கிறேன்.
ஆட்கொள்ள
வேண்டும்."
புன்னகைத்த
பிரம்மேந்திரர்
சம்மதித்தார்.

நம்பிக்கையூட்டும்
வகையில்
பணிகள் பல
செய்தார்.

ஆயினும்
சதாசிவனாரின்
காலைப் பிடித்தவர்
காலைப் பிடித்திழுக்க
சமயம்
பார்த்திருந்தார்.

ஒரு நாள்
சதாசிவனாரின்
குரு பற்றியும்
குரு
இருக்குமிடம் பற்றியும்
செல்லும் வழி குறித்தும்
கேட்டறிந்தார்.

பின்னொரு நாள்
குருவின்
ஆசியோடு
குருவின் குருநாதரைத்
தரிசிக்க
விடை பெற்றார்.

பரமகுரு
பரமசிவேந்திரரைக்
கண்டு
தரிசித்த
மாத்திரத்தில்
பிரம்மேந்திரரைப்
புகழ்ந்து தள்ளினார்.

ஒவ்வொரு புகழ்
வார்த்தையும்
குருவின் செவிகளில்
தேனாய்ப் பாகாய்ப்
பாய்ந்தன.

மகிழ்ந்தார்.

குருவிற்கு
வேறென்ன
ஆசை...?

தம் சீடன்
அவயத்து
முந்தியிருப்பதைக்
கேட்டு
மகிழ்வதைத் தவிர.!

'ஆனால்...'
சாஸ்திரியார்
சதி பின்னத்
தொடங்கினார்.

'சுவாமி...!
உங்கள்
சீடர்களில்
மிகமிக உயர்ந்தவர்
பிரம்மேந்திரரே!

அவரின்
எல்லை
சமஸ்தான
வித்வான்
அல்லவே!

வெறுமனே
வருகின்ற
புலவர்களிடம்
தன்
மேதா விலாசத்தைக்
காண்பித்து
அவர்கள்
வயிற்றில் அடிக்கிறார்.

அவர்கள்
சமஸ்தானத்தையும்
சேர்த்துத்
திட்டுகிறார்கள்.

எப்பேர்ப்பட்ட
மகான்
நம் பிரம்மேந்திரர்!

அவர் நோக்கம்
தவமாய்
அல்லவா
இருக்க வேண்டும்?

அதில் அல்லவா
அவர் மேலும்
சிறக்க வேண்டும்?

தவத்தில் சிறந்தால்
மைசூரில் மகாராஜா
மட்டுமல்ல.
எத்தனை மகாராஜாக்கள்
அவரைத் தரிசிக்கக்
காத்திருப்பார்கள்.

பரமசிவேந்திரர்
மனமறிந்து
சாஸ்திரியார்
சீவிய கொம்பு
பதம் பார்க்க
ஆரம்பித்தது.

'இங்கே
அழைத்ததாக
சதாசிவத்திடம்
சொல்'.

குறைவாகவே
சொன்னார்.

சாஸ்திரியார்
சுட்டிக்காட்டிய
குறை
நியாயமெனப்
பட்டது
அவருக்கு!

மைசூர்
திரும்பிய
சாஸ்திரியார் 
பிரம்மேந்திராளிடம் 
குரு
பார்க்க விரும்புவதாகச்
சொல்ல
குரு அழைப்பை
உடனடியாக ஏற்று
குரு நினைப்போடு
பதவியை
உடனே
ராஜினாமா
செய்து விட்டுப்
புறப்பட்டார்.

ஒளியின்
வேகத்தை விட
வேகமாக
விரைந்து
குருநாதர்
தாளடி
பணிந்தார்
ஒளி வடிவமான
பிரம்மேந்திரர்.

குரு
ஏதும்
பேசவில்லை.

கண்ணீரோடு
குருவின்
முகம்
பார்த்திருந்தார்
பிரம்மேந்திரர்.
 
'ஊரார்
வாயெல்லாம்
அடக்கக்
கற்ற நீ
உன் வாயை
அடக்கக்
கற்றுக்
கொள்ளவில்லையா?'

சடசட வென
வார்த்தைகள்
சிதறின.

திக்கித்துப் போனார்
சீடர் பிரம்மேந்திரர்.

‘வாயடக்கு'

குரு
ஒரே வார்த்தையில்
உபதேசம்
அருளியதாகவே
நினைத்தார்.

அன்று
பேசியதே
அவர்
பேசிய
இறுதிப் பேச்சு.

பின்
எப்போதும்
பேசவில்லை.

குருவின்
'ஒரு சொல்'
சீடரின்
வாழ்க்கையைப்
புரட்டிப் போட்டது.

தாயின்
வார்த்தையால்
பசியைத் துறந்தவர்
குருவின்
வார்த்தையால்
பேச்தைத் துறந்தார்.

'அடுத்து...'
என்கிற மாதிரி
குருவைப் பார்த்தார்
பிரம்மேந்திரர்.

'விரும்பிய
இடம் செல்.
தவம் செய்.'

சரி என்று 
மெலிதாகத் 
தலையாட்டி விட்டு
குரு சொல் 
மீறாத சீடராய்
மடம் விலகினார்.

ஓம் நமசிவாய!

(பாகம்-3 - தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)