சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 1)

 


போகர் பிரான்

(பாகம் 1)

-மாரிமைந்தன் சிவராமன்

போகர்
காலாங்கி நாதரின்
முதல் மாணவர்.
சித்தர்களில்
முக்கியமானவர்.

கொங்கணர்
கருவூரார்
இடைக்காடர்
சட்டைமுனி
புலிப்பாணி
ஆகியோர்
போகருடன்
கூடவே
பயணித்த
சீடர்கள்.

நந்தீசர்
சுந்தரநாதர்
மச்சமுனி 
கமலமுனி
திருமாளிகைத் தேவர்
ஆகியோரும்
போகரின்
சீடர்களே
என்பாரும்
உண்டு.

'மெய்வழி கண்டவர்'
என்று
திருமூலரால்
அவருக்கு ஒப்ப
போற்றப்பட்ட
பேறு பெற்றவர்
போகர் பிரான்.

மற்றைய
சித்தர்களை விட 
மக்கள் நலனில் 
மனத்தைச்
செலுத்தியவர். 

மக்கள் சேவையே 
மகேசன் சேவை
என்று
வாழ்ந்தவர்.

சீரிய
விஞ்ஞானி.
வேதியல் துறையில்
வித்தகர்.
இயந்திரவியலில்
முதல் ஞானி.

அனைத்துக்கும்
மேலாய்த்
தமிழ்ச் சித்தர்.

சீன தேசத்தில்
துணி விற்கும்
ஏழைக் குடும்பத்தில்
பிறந்தார்
போகர் பிரான்.

மழலைக்
குழந்தையே
ஞானம் பேசியது.

சின்னஞ்
சிறு வயதில்
மந்திரம்
சொன்னது.
விசித்திரமாய்
உபதேசம்
செய்தது.

ஊரார்
வியந்தாலும்
தாய்
விசனமடைந்தாள்.

குழந்தைக்குப்
புத்தி
பேதலித்துவிட்டது
என
நாளும் அழுதாள்.

கண்ணீரைத்
துடைத்து
கண்மணி
சொல்வான்.

"அம்மா...
கவலைப்படாதே! 

நான் மற்றவர் போல்
சாதாரணக்
குழந்தை அல்ல.

அற்பப் பிறவியல்ல.
அற்புதப் பிறவி.

பிறவிக் கடலைக்
கடந்து
பெரும் பேறு
அடையவிருப்பவன்.

ஏழு கடல்களையும்
கடந்து
உலகைச் சுற்றி
உலகையே
பிரமிக்க வைக்கப்
பிறந்திருப்பவன்.

புதியன பல
படைக்க இருப்பவன்.
காலத்திற்கும்
அழியாதிருப்பவன்."

குழந்தையின்
பேச்சில்
தாயின்
கண்ணீர்
சற்று உலரும்.

பின்னாளில்
இவையெல்லாம்
உண்மையானதைக்
கண்டு மகிழ
தாய்  தான் இல்லை. 

கால வெள்ளத்தில்
இறைவன்
திருப்பாதங்களில்
இளைப்பாற 
அந்தத் தாய் 
போய்விட்டாள்.  

ஆனால்
நாடு கடந்து
புவி கடந்து
உலக மாந்தர்
போகரின்
சித்தாடல்கள்
கண்டு
வியந்து நின்றனர்.
வணங்கி நின்றனர்.
இன்றும் நிற்கின்றனர்.

போகர்
சீன தேசத்தவர்
என்கிறார்
அகத்தியர்.

சமயத்தால்
பௌத்தர்
என்பதும்
ஒரு கருத்து.

சீனாவிலிருந்து
பாரதம்
வந்தாரா
அல்லது
தமிழகத்திலிருந்து
சீனா
சென்றாரா
எனக்
குழப்பம் நிறைந்தது
அவர் வரலாறு.

போகரின்
திவ்விய சரித்திரத்தில்
ஏராளமான
கட்டுக்கதைகள்
நம்பமுடியாத நிகழ்வுகள்
சர்ச்சைகள்
நிரம்ப உண்டு.

இருப்பினும்
அவை
சுவாரசியமிக்கவை.
சித்த மகிமை
கொண்டவை.

அவர் நிகழ்த்திய  
அற்புதங்கள்
சித்தர்களின் 
மகத்துவம் கூறுவன.

போகரின்
வாழ்க்கையை
மூன்று நிலைகளில்
தரிசிக்கலாம்.

தமிழ்நாட்டில்
தவவாழ்வு வாழ்ந்து
சித்தாடிய காலம்.

சீனாவில்
அற்புதங்கள்
நிகழ்த்திய
அருள்நிறை காலம்.

தமிழகம் திரும்பி
பழனியில்
சித்தியடைந்த
நிறை ஞானக் காலம்.

இதில் 
முன்னது
பின்னது 
மாறியிருக்கலாம்.

போகரின்
வாழ்க்கையை
அறிய
போகர் 7000
மட்டும்
அடிப்படை ஆதாரம்.

போகர் பிரானுக்கு
63 சீடர்கள்.

தான்
கற்றதனைத்தையும்
அவர்களுக்குக்
கற்றுத் தந்தார்.

அவற்றைச்
சோதிக்க
சஞ்சாரம்
செய்யச் சொன்னார்.

அவர்கள்
பூவுலகம்
சுற்றிவிட்டு
மேலுலகம்
சஞ்சரித்து
மனோன்மணித் தாயை
வணங்கி மகிழ்ந்தார்கள்.

மீண்டும் போகரிடமே
அடைக்கலமானார்கள்.

'சிறிது காலம்
சமாதியில்
இருங்கள் '
எனக் கூறிய
போகர்
தானும்
ஒரு
கணங்க
மரத்தின் கீழ்
சிவமோனத்தில்
ஆழ்ந்தார்.

ஆழ்ந்தவர்
பிரம்ம நிலையில்
அமிழ்ந்து
போனார்.

காலம்
கடந்தது.

அவ்விடம்
காடாய்
அடர்ந்தது.

ஒரு சமயம்
அவ்வழி வந்த
சிங்க ஜோடி ஒன்று
அங்கேயே
தங்கி
வாழத் தொடங்கியது.

அருகிலிருக்கும்
போகர்
சிலை போலிருக்கவே
ஏதோ
கற்சிலையென
விட்டு விட்டன.

காலம்
வேகமாகச்
சுழன்றது.

சிங்கத்தின்
குடும்பம்
பெரிதானது.

ஒரு
சிங்கக் கூட்டத்தின்
வாழ்விடம் ஆனது
அவ்விடம்.

காட்டு விலங்குகளை
வேட்டையாடிக்
கொண்டு வந்து
உண்ணும் இடம் 
அதுதான்.
நேரம் காலமின்றி 
கலவி புரியும் 
காம புரியும் 
அதுதான்.

ஒரு நாள்
ஆண் சிங்கம்
கற்சிலை மடியில்
ஆனந்தமாய்
அனந்த சயனம்
கொண்டது.

வழக்கம் போல்
நாவால்
உடல் மேவிய
சிங்கம்
சிலை போல்
இருந்த
போகர் 
பெருமானையும்
இதமாய்
நக்கத்
தொடங்கியது.

போகரிடம்
எச்சலனமும்
இல்லை.
கற்சிலை
தோற்கும்
மோன நிலை.

ஆனால்
கண்களில்
மட்டும்
கண்ணீர்.

அது
கன்னத்தில்
வழிந்து
மார்பில்
ஓடி 
சிங்கத்தின் 
வாயில் பட்டது.

அத்துளி
ஓர் அதிர்வை
உண்டு பண்ணியது.

துள்ளி எழுந்தது
சிங்கம்.

நாவை நனைத்த
சிறு துளி
பெரும் ஞானத்தைத்
தந்து நிறைத்தது. 

'ஐயகோ...
இது கற்சிலையல்ல...!
பொற்சிலை
வடிவில்
ஒரு
மகானின் சிலை...'

புத்தியில்
உறைத்தது.

'ஐயோ...
இவரின்
தவத் தலத்தை
இத்தனைக் காலம்
மாசுபடுத்தி
விட்டோமே!'

சட்டெனச் 
சிந்தனை
எழுந்தது.

தனது
கூட்டத்தை
அழைத்து
விஷயத்தைச்
சொன்னது.

சிங்கப்
பரிவாரங்கள்
நாற்புரம்
சிதறி ஓடி
நீர் கொண்டு
வந்து
சுத்தம் செய்து
மலர் கொண்டு
வந்து
மங்கலபுரி ஆக்கின.

அவரைக்
கடவுள் எனத்
தொழத் தொடங்கின.

ஞானம் விரிந்தது.

சிங்கத் தலைவன்
ஒரு நாள் சொன்னான்.

"புலால்
தவிர்ப்போம்.
கொலை, புலை
வேண்டாம்."

'உணவுக்கு?'
கேட்டது
இளஞ்சிங்கம்.

'காய்கனி
போதும்'
கர்ஜிக்காமல்
கனிவாய்ச்
சொன்னது
சிங்க ராஜா.

'வேட்டைக்குப்
பதில்
என்ன
செய்வது?'

புதிய தலைமுறை
தர்க்கத்திற்குத்
தயாராய் நின்றது.

"சிவ சிந்தனை
போதும்.
இந்த இறை
வேட்டையில்
இறைவனே
சிக்குவார்."

புதிய 
வேதம் சொன்னது.

சிங்கக் கூட்டம்
சைவக் கூட்டமாகி
வேட்டை விட்டு
சிவயோக வேட்டையில்
சிறக்கத் தொடங்கின.

பல காலம்
கழித்து
ஒரு நாள்
தவராஜா
தவம்
கலைந்தார்.
எதிரில்
சைவப்
பழமாய்த் திகழ்ந்த
சிங்கராஜாவை
யாரெனக்
கேட்டார்.

நடந்ததைச்
சொன்னது
சிங்கராஜா.
நெகிழ்ந்து போனார்
போகர் பிரான்.

அப்படியே
ஆரத் தழுவினார்
ஞான விலங்கை.

அவர் அருள்
அப்படியே
சிங்கத்தினுள்
பாய்ந்தது.

அதன்பின்
உலகே
வியக்கும்
அற்புதம்
நிகழ்ந்து.

சிங்கராஜா
ஓர்
அரச குடும்பத்தில்
அருந்தவக்
குழந்தையாய்
அவதாரம்
எடுத்தார்.

கல்வி 
கேள்விகளில் 
சிறந்தார்.

விவேகம் மிக்க 
வீரராய் வளர்ந்தார்.

உரிய பருவத்தில்
அரசராய்ப்
பொறுப்பேற்று
நாடாண்டார்.

ஒரு சிறு
கண்ணீர்த் துளி
உண்ட
சிங்கம்
ஞானம் பெற்று
நானிலம் போற்றும்
அரசனானது
போகரின்
பேரருள்.

போகரின்
மகிமை பேசும்
குருவருள்.



பொதிகை மலைச்
சாரலில்
போகர்
நிறைந்திருந்த
காலம்.

உணவு
சமைத்து
உண்பதே
அவர்
வழக்கம்.

உண்ட
களைப்பில்
தூக்கம்
வரவில்லை,
தாகம்
தலை தூக்கியது.

தண்ணீர்
குடிக்க
அருகிலிருக்கும்
தெருவுக்குப்
போனார்.

அது
அந்தணர்
வாழும்
அக்ரஹாரம்.

கும்பலாக
அமர்ந்து
வேதம்
ஓதிக் கொண்டிருந்து
ஒரு பெருங்கூட்டம்.

போகரின்
பிச்சைக்காரத்
தோற்றம்
அந்தணர்களை
அருவருப்புக்கு 
உள்ளாக்கியது.

"போ...
போ...
நாற்றம் பிடித்தவனே...
விலகிப்போ ....

கிட்ட வந்தால்
குமட்டுகிறது."

விரட்டியவர்கள்
வீட்டிற்குள் ஓடி
கதவைத் தாழிட்டனர்.

ஜன்னலில் போகர்
போய் விட்டாரா
எனக்
கண்களை
மேயவிட்டனர்.

துரத்தி விட்டதில்
எரிச்சலடைந்த
போகர்
குறுக்கே போன
பூனையைப் பிடித்து
அதன் காதில்
ஏதோ சொன்னார்.

தாவியோடி
ஒரு வீட்டின்
கூரை ஏறிய
அப்பூனை
உரத்த குரலில்
'மியாவ்'
எனக்
குரலிடவில்லை.

அட்சர
சுத்தமாக
வேதம்
ஓதியது.

அடுத்த கணமே
கதவுகள் 
திறக்கப்பட்டன.
திகைத்தபடி
அந்தணர்கள்
ஓடி வந்து
போகர்
காலடி விழுந்தனர்.

"சுவாமி!
தங்கள்
ஆற்றல் அறியாது
அவமதித்து விட்டோம்.
மன்னியுங்கள்."

புன்னகைத்தார்
போகர்.

'தாங்கள்...?'
பெருசொன்று
உடல் முடக்கிக்
கேட்டது.

போகர்
மெலிதாய்ச்
சொன்னார்.

"சிவன் போக்கில் 
செல்லும் 
ஒரு பித்தன்...
எனைச் 
சித்தன் என்பர்.
போகர் என்று 
அழைப்பர்."

"ஐயனே!
நல்ல
சமயத்தில்
வந்தீர்கள்.

வறுமையால்
வாடுகிறோம்.
பல காலமாய்
அதற்குத் தான்
கூட்டாக வேதம்
ஓதினோம்.

பல காலம்
ஓதியும்
பலனில்லை.

பாத்திரங்கள்
அடுப்பேறிப்
பல நாட்கள்
ஆகின்றன.

வழி செய்யுங்கள்.
பசி தீருங்கள்.
வாழ்த்தும் எங்கள்
பரம்பரை."

காலில் விழுந்தது
முதலில் விரட்டிய
கூட்டம்.

"கவலைப்படாதீர்!
வீட்டிலிருக்கும்
பாத்திர
பண்டங்களை
எடுத்து வாருங்கள்."

வந்தனர்.

அண்டா
குண்டா
அடுக்குப் பாத்திரம்
தவலை
சொம்பு
மண்வெட்டி
கடப்பாறை
குவிந்தன.

போகர்
இறையை
வணங்கித்
தீயிட்டார்.

பழுக்கக்
காய்ந்த
பாத்திரங்கள்
மீது
இடுப்பிலிருந்து
எடுத்த
குப்பியில் இருந்து 
சில துளிகளைத் 
தெளித்தார்.

பாத்திரங்கள்
பளபளப்பு
மட்டும்
காட்டாமல்
வித்தியாசமாய்
ஜொலித்தன.

ஆம்!
பொன் நிறத்தில்
பிரகாசித்தன.

அத்தனையும்
தங்கமாய்
மாறி இருந்தன.

"எடுத்துச்
செல்லுங்கள்...
எஞ்சிய
காலத்தை -
பிஞ்சுகளின்
எதிர்காலத்தை
ஏற்றமாக்குங்கள்."

காலில்
விழுந்தவர்கள்
எழுவதற்குள்
போகர்
மீண்டும்
காடேகி இருந்தார்.

அந்தணர் குலம்
அவர்
போன திசை
தொழுது
பல்லாண்டு
காலம் செழித்து
வாழ்ந்தது.

சிங்கத்திற்கு 
உபதேசம்
செய்து
நாடாள
வைத்தவர்
பூனைக்கு
உபதேசம்
செய்து
வேதமோத
வைத்தவர்
பசுவிடம்
உபதேசித்து
பரமனடி
சேர்த்தது
அடுத்த அற்புதம்!


ஓர்
இடையன்.

அவனது
சொத்து
ஒரு காராம்பசு.

ஒருநாள்
பசித்த புலியொன்று
பசுவைப்
பிடித்துண்ணப்
பாய்ந்தது.

பசு
ஒருபுறமும்
இடையன்
இன்னொரு புறமும்
தலைதெறிக்க ஓடித்
தப்பித்தனர்.

பின்னர்தான்
பிரச்சினை.
இருவரும்
சேர முடியவில்லை.

இடையன்
மனம் சலித்து 
ஊர்ப் பக்கம் 
போய் விட்டான்.

குகைப் 
பக்கம் போன
பசு
காடு மலைகள்
அலைந்து திரிந்தது.

காட்டில்
கருவீழி இலை
அதிகம்.

அதைத்
தின்றது.
அது ஈன்ற
கன்றும்
தின்றது.

கருவீழி
இலை
காயகற்ப
மூலிகை.

உண்பவர்
பெறுவர்
கற்ப தேகம்.

அம்மூலிகையைத்
தேடிச் சென்ற
போகர் பிரான்
ஒரு நாள்
அப்பசுவைப்
பின்
தொடர்ந்து
மூலிகைகள்
விளையுமிடம்
அறிந்தார்.
மகிழ்ந்தார்.

மகிழ்ந்தவர்
பசுவையும்
கன்றையும்
தட்டிக்
கொடுத்ததோடு
காதோடு காதாக
உபதேச மொழிகள்
சொன்னார்.

அதன் பலனாக
அக்கணமே
அவையிரண்டும்
காமதேனுப் பசுக்களாகிப்
பரமன் நிழல் தேடிப்
பரவசத்தோடு
தெய்வலோகம் சென்றன.

அனாதையாய் 
அலைந்த பசுவை
பசுபதீஸ்வரரிடம்
காமதேனுவாய்ச்
சேர்ப்பித்த அற்புதம்
கருணைக் கடல்
போகர் பிரானின்
சித்தாடல்களுக்கு
ஒரு சான்று.

(பாகம் -2 தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)