சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 1)

 


சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 1)

-மாரிமைந்தன் சிவராமன்

அவரைப் போல்
ஒரு நிறை ஞானியை
இந்த பூமி கண்டதில்லை.

காவி உடையில்லை. 
கனிந்துருகும்
பேச்சில்லை.
ஆடையற்ற கோலம்.
உணர்வற்ற மோனம்.

முற்பிறப்புக் கல்வி
இப்பிறப்பில் 
காத்திருக்க,
உயர் பண்டிதர்கள்
சாஸ்திரிகள் 
கற்பித்த
வேத சாஸ்திரங்கள்
மெய் ஞானம் கூட்ட,
வீடு துறந்து
உச்ச தவத்தில்
உலவிய
உயர் ஞான
தவச் செல்வர்.

காடுகளில் கழனிகளில்
மேடுகளில் மலைகளில்
குகைகளில் 
நதிக் கரைகளில்
எப்பற்றும் அற்று
உணர்வற்று ஏதுமற்று
கூரிய முள் மேலே
ஆற்று மண் மேலே
வைக்கோல் போர் மேலே
ஆள் அரவமற்ற
மலை மேலே
வித்தியாசமான
சித்தர் பிரானாய்
பவனி வந்த
பிரம்ம ஞானி.

அதிசயங்கள்
நிகழ்த்தியவர்.
அற்புதங்கள் காட்டியவர்.
ஆண்டவரை அண்டியவர்.
ஆண்டவராய் ஆனவர்.

திருமூலருக்கு 
அடுத்து
யோக சாதனைகள்
அனைத்தும்
முழுதாய் செய்தவர்
என
சித்தர் பரம்பரை
பிரமித்துச்
சுட்டிக் காட்டும்
யோக சித்தர்.

‘மோன குருவே'
எனத்
தாயுமானவரால்
துதிக்கப்படும்
அவர்...

பிரம்மேந்திரர்
சதாசிவ பிரம்மம்.

அவர்
திவ்விய வரலாறு
படிப்பதும்
கேட்பதும்
புண்ணியம்.
கோடி
புண்ணியம்.

இம்மாதிரியான
திவ்விய 
சரித்திரங்களைப்
படிப்பதன் வாயிலாக
உண்மையை
அறிவதை விட
ஒரு படி 
மேலே போய்
உணர்வதே
சாலச்சிறந்தது.


மதுரையம்பதியில்
மாசுமருவற்ற
வைதீக
ஆந்திர
பிராமணர் குலத்தில்
அவதரித்தார்
பிரம்மேந்திரர்.

தந்தை
சோமநாத அவதானியார்.
தாய்
பார்வதி அம்மை.
காலம்
18-ஆம் நூற்றாட்டின்
முதல்
10 ஆண்டுகளுக்குள்.

பெற்றோர்
வைத்த பெயர்
சிவராமகிருஷ்ணன்.

வீட்டில்
விரும்பி அழைக்கப்பட்ட
செல்லப் பெயர்
பிச்சுக்குப்பன்.

தந்தை
சோமநாதரே
பெரிய யோகி.
தாய்
பார்வதி அம்மை
ராம பக்தை.

இருவரும்
ராமேஸ்வரம்
யாத்திரை
சென்று
நீண்ட நாள்
பிள்ளை இல்லாக்
குறையை
இறை முன் வைத்து
'சத்புத்திரன்'
வேண்டுமென்று 
தொழுதபடி இருந்தனர்.

இறைவன்
இருவர்
கனவிலும்
ஒரே நேரம்
வந்து
தெய்வக் குழந்தையே
பிறக்குமென்று
உறுதி தந்தார்.

அப்படி
தவமாய்
தவமிருந்து
வந்துதித்தவர் தான்
பிரம்மேந்திரர்.

விளையும்
பயிர்
முளையிலேயே
தெரிந்தது.

முற்பிறப்பில்
கற்றதெல்லாம்
இப்பிறப்பிலும்
அப்படியே
நிறைந்து
இருந்தது.

குருகுலக் கல்வி
உறுதுணை செய்ய
படிப்படியாய்
பூரண வளர்ச்சி
கண்டார்.

வடமொழி
வசமானது.
தெலுங்கராய்ப் பிறந்தும்
தமிழராய்த் தவழ்ந்தும்
இறையருள் கூடி
சமஸ்கிருத
ஞானம்
நிறைந்து நின்றது.

பற்பல
கலைகள்...
கற்றுத் தந்தவரே
போற்ற
சிறந்து
விளங்கினார்
சிறு பருவத்திலேயே.

அக்கால
மரபு
பால பருவத்திலேயே
திருமணம்.

தெலுங்கு
பிராமணர்
முறைப்படி
கல்யாணம்
சின்னஞ்
சிறு வயதிலேயே
இனிது முடிந்தது.

பால்ய
திருமணம்
நூல்கள்
படிப்பதற்கும்
கல்வி
கற்பதற்கும்
இடையூறாய் இல்லை.

பின்னாளைய
நிறை ஞானி
அந்நாளில்
சிறு பிராயத்திலேயே
கல்வி கேள்விகளில்
நிறைந்திருந்தார்.

சிவராம கிருஷ்ணன்
என்றாலே
'ஆகா...பேஷ்... பேஷ்'
என்று வாழ்த்தினர்
சென்ற இடமெல்லாம்
ஆன்றோர் சான்றோர்.

எல்லாம்
சரியாகத் தான்
போனது.

வீட்டில்
ஒரு விழா
அமர்க்களமாய்
நடக்கும் நாள் வரை.

அன்று
சிவராமகிருஷ்ணனின்
இளம் மனைவி
பூப்படைந்தாள்.

வீடு
விழாவை ஒட்டி
களை கட்டியிருந்தது.

உறவினர்
நண்பர்கள்
உளம் மகிழ்ந்து
கூடியிருந்தனர்.

ஆளாளுக்கு
ஒரு வேலை.
பரபரப்பாய்
இருந்தது
வீடு.

சிவராமகிருஷ்ணன்
அன்றும்
விடுப்பெடுக்காது
கல்வி கற்கச்
சென்று விட்டார்.

வீடு
திரும்பிய வேளை
வீட்டில்
கூப்பாடும்
கும்மாளமும்
நிறைந்திருந்தது.

விருந்து சாப்பாடு
அப்போது தான்
தயார்
ஆகிக் கொண்டிருந்தது.

சிவராமகிருஷ்ணனுக்கோ
அது பசி வேளை.

கல்விச் சாலை
செல்லும்
அவசரத்தில்
காலையிலும்
உண்ணவில்லை.

‘பசிக்கிறது’
என்றார்.

நண்பர்கள்
பரிகசித்தனர்.

'அடேய்...
என்ன பசி
அந்தப் பசியா'

அன்றைய
விழா முடிவில்
சாந்தி முகூர்த்தம்
என்பது மரபு.

எனவே
அவர்கள்
கேலியில்
அர்த்தமிருந்தது.

அம்மாவைக்
கேட்டார்
'அம்மா...
பசிக்கிறது
அன்னம்
வேண்டும்’

'தம்பி...
பசி பொறு.
இன்று
ஒருநாள்
பட்டினி
கிடந்தால்
குடி
முழுகிப்
போய் விடாது.

பேசாம
இங்கே
உட்கார்ந்திரு’

போகிற
போக்கில்
கடுப்பாய்
அலட்சியமாய்
சொல்லி விட்டு
ஒரு
மூலையைக்
காட்டினாள் தாய்.

அறிவுப் பசி
நிறைந்திருப்பது போல்
வயிற்றுப் பசியும்
நிறைய வேண்டும்
என
நினைத்திருந்த
சிவராமகிருஷ்ணனின்
மூளை
யோசிக்க
ஆரம்பித்தது.

பசி
பொறுமையைச்
சோதித்தது.

நண்பர்களின்
கேலி
வெறுப்பேற்றியது.

தாயின்
உதாசீனம்
சிந்திக்க வைத்தது.

திருமணத்தன்று
கூட
இப்படித்தான்.

கல்யாண
கலகலப்பில்
மாப்பிள்ளையை
யாரும்
கண்டு கொள்ளவில்லை.

மணமகனுக்கும்
பசிக்கும்
என
யாருக்கும்
தோன்றவே இல்லை.

அவரவர்
வேலையில்
கலகலப்பாய்
இருந்தனர்.

இன்றும்
அதே நிலை.

சிந்தனை
தலை தூக்கியது.
மகிழ்ச்சி
மறைந்தோடியது.

புதிய
எண்ணம்
பூத்தது.

எல்லாமே
வேஷம்.

சுற்றம்
நட்பு
உறவு
மனைவி
எல்லாமே
வேஷம்.

ஒருவன்
பசியால்
செத்துக்
கொண்டிருந்தால்
கூட
இவர்களுக்குக்
கவலையில்லை.

காலன்
வந்து
கவர்ந்து சென்றாலும்
தடுக்க வரமாட்டார்கள்.

பூத்த
எண்ணம்
விரிவாய்
விரிந்தது.

ஞானக் கதவு 
திறக்க முயன்றது.

கபில வஸ்துவின்
அரசிளங்குமரன்
சித்தார்த்தன்
ஒரு வினாடியில்
முடிவெடுத்து
கானகம் சென்றது
துறவறம் கொண்டது
ஞானம் பெற்றது
நினைவுக்கு வந்தது.

சித்தார்த்தன்
கௌதம புத்தரான
காட்சி
மனதில்
காட்சியானது.

ஞானக்கதவு 
மெல்லத் திறந்தது.

'காதற்ற ஊசியும்
வாராது காண்
கடை வழிக்கே'
என்ற இறை வாக்கை
உணர்ந்த
அந்த நொடி
பட்டினத்தடிகளது
நினைவில் நின்றது
நினைவுக்கு வந்தது.

ஞானக்கதவு 
அகலத் திறந்தது.

அந்த நொடி
ஒரே நொடி தான்.
ஒரே ஒரு நொடி தான்
வாழ்வின் போக்கையே
மாற்றி விடும்.

சிவராமகிருஷ்ணனும்
அந்த
ஒரு நொடி நேரத்தில்
முடிவெடுத்தார்.

'உண்மை வேறு'
என்ற தேடலில்
விடை கொடுத்தார்
விருந்துக்கு
விழாவிற்கு
விருந்தினர்க்கு.
உறவுக்கு.

வீட்டை விட்டு
வெளியேறினார்.

அப்போதும்
அவருக்குப் 
பசி இருந்தது.

அது
வேறு பசி.
ஆசிரியர்
கற்பித்த
அறிவுப் பசி
அல்ல...
இது
வேறு பசி...
ஞானப் பசி.

ஆம்..!.
தேடல்
உண்மையைத்
தேடும் தேடல்.
இறை தேடல்
இரை தேடல்
அல்ல...
இறை தேடல்.

இல் வாழ்க்கையை
விடுத்து
இறை வாழ்க்கையை
நிறையெனக்
கொள்ளும்
இளம் வாலிபனின்
ஞானத் தேடல்.
இறை தேடல்.
நிறை தேடல்.

சிவராமனின்
கால்கள்
சென்ற இடம்
கும்பகோணம்
ஸ்ரீ மடம்.

ஏற்கனவே
கல்வி கற்ற இடம்.

அங்குதான்
சிவராமகிருஷ்ணனின்
குருகுல குரு
பரமசிவேந்திரா சாஸ்திரி
தங்கி இருந்தார்.

சிவராமகிருஷ்ணனின்
கண்கள
அவரைத் தரிசித்தன.
கரங்கள்
குவிந்த படியே
தொழுதன.

சிவராமகிருஷ்ணனின்
விருப்பத்தையும்
வைராக்கியத்தையும்
அறிந்த குருநாதர்
வியந்தார்.

அதுவே
பக்குவ நிலை
என்பதை
அனுபவித்தறிந்தவர்
அவர்.

தன்
குருகுல
மாணவர்
உலக
வாழ்க்கையின்
இன்ப துன்பங்களை
வெறுத்து விட்டு
வந்திருப்பதைப்
பாராட்டி
அரவணைத்து
உபதேசிக்கத்
தொடங்கினார்.

மந்திர உபதேசம்
தந்தார்.

முன்பே
குருகுலக்
கல்வி
முடிந்தவுடன்
திருவிசைநல்லூர்
சென்று
ராமய்யா
சாஸ்திரிகளிடம் 
வேதாந்தம் 
கற்றிருந்தார் 
சிவராமகிருஷ்ணன்.

அதோடு
'அய்யாவாள்'
என
அறிஞர்களால்
போற்றப்பட்ட
ஸ்ரீதர வெங்கடேசர்
என்கிற
போதேந்திர சுவாமிகள்
பிச்சாண்டார் கோயில்,
மகாபாஷ்யம்
கோபால கிருஷ்ண
சாஸ்திரிகள்
ஆகியோரிடமும்
ஏற்கனவே
வேதாந்தம் பயின்றிருந்த
சிவராமகிருஷ்ணனுக்கு
துறவறத்தில் 
ஆசை வந்து
இல்லறம் துறந்தது
இறை காட்டிய பாதையே
அன்றி வேறில்லை.

வேதம்
பயின்றிருந்ததால்
தான்
வீடு துறந்தார்
என்றும்
சொல்வாருண்டு.

பரமசிவேந்தரா சுவாமிகள்
பரமே சிவனெனத்
திகழ்ந்த
சிவம் திகழ் ஞானி.

அவர்தம்
மடம்
வந்த வேளை
சிவராமகிருஷ்ணனின்
பசிப்பிணி 
முற்றிலும்
பறந்து போனது.

பசி என்ற சொல்லே
அதன் பின்னர்
அவர்
வயிற்றிலும்
உதட்டிலும்
எழவில்லை.

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
சிவராமகிருஷ்ணன்
சீடராய்
வேதாந்த வித்தகராய்
தர்க்கத்தில் வல்லவராய்
சாஸ்திர ஞானியாய்
மிளிர்ந்து ஒளிர்ந்தார்.

மடமெங்கும்
சிவராமகிருஷ்ணன்
பற்றியே
பேச்சிருந்தது.
பாராட்டு இருந்தது.

ஒரு நாள்
பரமகுரு
பரமசிவேந்திரா சரஸ்வதி
சிவராமகிருஷ்ணனை
அழைத்தார்.

கும்பகோணம்
ஸ்ரீ மடமே
உச்சியில் வைத்து
கொண்டாடிய
அவரை
உச்சி முகர்ந்து
'நீ 
உச்சத்தில் 
ஜொலிக்க வேண்டியவன்'.
மெல்லச் சொன்னார்.

கூடவே
பெயர் மாற்றம்
தந்தார்.

'சதா சிவன்'
எனும்
புதுப் பெயரைச்
சூட்டினார்.

ஓம் நமசிவாய!

(பாகம் -2 - தொடரும்)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)