சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

 


கருவூரார் (பாகம் 1)

-மாரிமைந்தன் சிவராமன்

சிற்பக்கலையில் சிறந்தோங்கிய கருவூரார்

கருவூர் 
என்னும் 
ஆன்மீக பூமியின் 
தலைநகர்.

அங்கே
ஆம்ராவதி
என்னும் 
அமராவதி நதியின் 
கரை ஓரம்.

நதியில்
நீராடி விட்டு 
கரைக்கு வருகிறார்
ஒரு மகான்.

அவரை நோக்கி 
வருகிறது 
ஒரு வேதியர் கூட்டம்.

"அவனே தான் 
பிடியுங்கள்...
அடித்துச் சாயுங்கள்... 
அழியட்டும் !
 அற்பன் !"

வன்மத்தோடு
விரைகிறது
வேதியர் கூட்டம்.

ஒரு கணத்தில்
உணர்கிறார்
மறு பிறப்பில்லாத 
அந்த மகான்.

அவருக்கும் 
உலகின் மீது
வெறுப்பு தான்.

எது
சொல்லியும்
ஏற்காத 
மக்களிடம்
ஏற்பட்டிருந்த 
வெறுப்பு.

"இனி
இவ்வுலகம் வேண்டாம்.." 
முடிவெடுக்கிறார் 
ஓட தொடங்குகிறார்.

உயிர் மீது 
அவருக்கேதும்
விருப்பமில்லை.

சிவப்பாதமே
அவர் விருப்பம்.

ஏக இறைவனான
சிவனை நாடி
அவன் திருப்பாதம் தேடி
ஓடுகிறார். 

கொலைவெறியில்
வேதியர் கூட்டம்
விரட்டுகிறது.

ஓடி வந்தவர் 
ஆனிலையப்பர் 
ஆலயம் புகுகிறார்.

உள்ளே 
பரமன் 
பசுபதீஸ்வரர் 
சன்னதி அடைந்து 
மூலஸ்தானத்திலிருக்கும்
மூல நாதனை
இறுக அணைக்கிறார்.

துரத்தி வரும் 
கூட்டம் 
அருகில் வந்து 
பார்க்கிறது 
சிவபாதம் பற்றியவரை
பதம் பார்க்க.

ஆனால் 
அவர்கள் 
பார்த்திருக்க பார்த்திருக்க 
ஆநிலையப்பரை அரவணைத்த
அந்த மகான்
சில நொடிகளில்
இறையோடு 
இறையாய் 
இரண்டறக் கலந்து
மறைகிறார்.

லயமாகிப்
போகிறார் 
சிவமயமாகிப்
போகிறார் .

கண்ணுற்ற
கூட்டம்
குற்றம் உணர்ந்து
கும்பிட்டு
நிற்கிறது.

கொலைக் கூட்டம்
தரை வீழ்ந்து 
இறைவனை
இறைஞ்சித்
தொழுகிறது.

இறைவனே
ஆட்கொண்ட
அந்த மகான் 
ஒரு மகா சித்தர்.

ஈசனே
ஜீவ முக்தியளித்த
இணையற்ற
ஜீவ முக்தர்.

அவர்
சித்தருக்கெல்லாம் 
சித்தர்.

அவர் தான்
கருவூரார்.

போகரின்
மாணவர்.
திருமூலரின் 
மனதில்
நிறைந்தவர்.

கொங்கணர் 
புலிப்பாணி
திருமாளிகைத் தேவர் 
போன்ற சித்தர்களுக்கு
அன்புமிகு
நண்பர்.

கருவில் 
ஊறாத
மறுபிறப்பற்றவர் 
என்பதே 
கருவூரார்
என்பதன்
பொருள்.

கருவூரில்
பிறந்தவர்
வாழ்ந்தவர் 
லயம் 
கொண்டவர் 
என்பதாலும் 
கருவூரார் 
என
அழைக்கப்படுகிறார்.

அந்தணர் குலத்தில் 
உதித்த
அற்புதச் சித்தர் 
கருவூரார் என
சொல்கிறது ஒரு தகவல்.

தாயும் தந்தையும்
சிலை செய்பவர்கள்  
பிழை கொண்ட
சிலைகளை
‌‍செப்பனிட்டுத் தருவார்கள் 
அதுவே அவரது தொழில்.

தொழிலைக் 
கொண்டு 
கருவூரார்
கண்ணார வகுப்பினர். 
அதனால்
அவர் ஒரு
விஸ்வகர்மா
என்பது 
அகத்தியர் கூற்று.

கருவூரார் வேறு
கருவூர்த் தேவர் வேறு
என்கிறது ஓர் ஆய்வு.

தங்கம் உருக்கி 
சிலை உருவாக்கும் 
கலையில் 
தேவ தட்சர்
குலத்தில்
உதித்த
கருவூராரின்
தொழில் நேர்த்திக்கு
தேவதட்சரே
ஈடாக மாட்டார்
என்ற பெருமை
கருவூராருக்கு உண்டு
என்கிறது 
ஒரு குறிப்பு.

கரூர்த் தேவர் ஒரு 
அந்தணர்.
பெரும்புலவர்.
சிவநெறி பரப்பி
ஊர் ஊராய்
வலம் வந்தார்
பற்பல பாடல்கள்
புனைந்தவர் 
என்பதும் 
ஒரு ஆய்வே.

'இருவரும் ஒருவரே!'
என்பது ஒரு சிலர் தீர்வு.

காலவரையில்லாது
வாழ்ந்த 
சித்தர்கள் 
ஒவ்வொரு காலத்திலும்
ஓரோர் பெயர்களில் 
உலா வந்திருப்பார்கள்
என்பர் அவர்கள். 

ஊர் வேண்டேன்
பெயர் வேண்டேன் 
என்பதே 
சித்தர் வாழ்க்கை நெறி.

ஊரோடு 
தொழிலோடு 
குலத்தோடு
உலாவந்த கோலத்தோடு
எழுதித் தந்த பாடலோடு 
தொடர்பு வைத்தது
பெயர் வைத்தார்கள்
பின்னால் வந்தவர்கள்.

எனவே 
பேரும்
குலமும் 
காலமும் 
வேறுபடுவது 
இயல்பே.

கரூர்ப் புராணமும்
திருநெல்வேலித் 
தல புராணமும் 
கருவூரார்
மகிமை போற்றும் 
பைந்தமிழ் நூல்கள்.

பெற்றோர் செய்த 
பெருந்தவப் பயனாய்
அவதரித்த
கருவூராருக்கு
சித்த ஞானிகள்
தொடர்பு
இயல்பாய் இருந்தது.

கோயில்
கோயிலாய் 
சென்று 
பணி செய்த 
பெற்றோர் 
அங்கிருந்த 
சித்தர்களின் 
அன்பை 
ஆசீர்வாதத்தை 
எளிதாய் 
பெற்றனர்.

அந்த வகையில்
பாலகனாயிருந்தபோதே 
கருவூராருக்கு 
ஞானப்பால் 
நிரம்ப கிடைத்தது.
உபதேசங்களால் 
ஊறித் திளைத்தார்.

அடுத்தடுத்து 
காலங்கிநாதர் 
காகபுஜண்டர் 
திருமூலர் 
அகத்தியர் பெருமாள் 
ஆகியோரிடமும்
உபதேசம் 
பெற்றார்.

அஸ்வினி
தேவரிடம் 
துருசு குரு 
என்னும் 
சுண்ணத்தையும் 
துருசு வேதை 
என்னும்
மார்க்கத்தையும் 
பயின்றார். 

குருமார்கள்
போற்றப்படும் 
அளவிற்கு 
யோகத்தில் -
அருளில்
சிறந்தோங்கினார்.

இவ்விதம் 
சித்த பெருமகானின் 
அருளால்
கருவூராரும்
காலப்போக்கில்
ஒரு சித்தரானார்.

அஷ்டமா சித்துக்கள் 
இஷ்டமுடன்  அவரின் 
உத்தரவுக்குக்
காத்திருந்தன.

சிவ நெறி 
பரப்பும் 
தேச சஞ்சாரம்
அவரது 
வாழ்க்கை 
நெறியானது. 

இளமையிலேயே 
போகரைத்
தரிசிக்கும் 
வாய்ப்பு கிடைத்தது 
கருவூராருக்கு.

கிடைத்த தலம் 
தவகோடி சித்தபுரம் 
எனும்
திருவாவடுதுறை. 

"கருவூரா...!

உன் குலதெய்வம்
அம்பாள். 

"அவளை வழிபடு. 
அவள் 
வழிகாட்டுவாள்."
என்றார் போகர். 

போகர் வாக்கு 
விரைவில் பலித்தது. 
சித்துக்கள் கை கூடின
ஞானவானாய் ஒளிர்ந்தார்.

அன்று ஒரு நாள்...
கருவூரார்
காசி விஸ்வநாதர் 
ஆலயத்தில் இருந்தார்.
கோயிலில் சிவலிங்க
தங்க விக்ரகம்
செய்யும் 
பணியில் இருந்தார். 

காசியில்
கருவூரார் 
ரசவாத 
வித்தையில் 
கோடி
லிங்கங்கள் 
செய்து 
வழிபட்டதாக 
வரலாறு உண்டு.

சொர்ண லிங்கங்கள்
திருடர் கையிலும்
தீயவர் கையிலும்
போய்விடக்கூடாது
என்பதற்காக 
அவற்றைத்
தங்கச் செம்பாக
மாற்றி வைத்தார். 

பார்ப்பதற்கு
செம்பு போலிருக்கும்.
தவம் செய்பவருக்கு மட்டும்
தங்கமாகத் தெரியும்
இது 
தங்கச் செம்பு ரகசியம். 

சொர்ணலிங்கங்கள் 
நிறைந்த
காசிக்கு 
செல்வோருக்கு
மோட்சம்
கிடைக்கும்
என்பதன்
பலாபலன்
இதுவே. 

விக்கிரக
வேலையில் இருந்த போது 
ஒரு காகம் 
அவர் அருகே 
வந்தது.

அதன்
காலில் ஓர் ஓலை.
போகர் பெருமான் 
அனுப்பியிருந்தார். 

அவசரமாய் 
ஓர் அழைப்பு. 

அப்போது 
தஞ்சையை 
ஆண்டு வந்த
ராஜராஜ சோழன். 
தஞ்சை 
பெருங்கோயிலைக்
கட்டிக் கொண்டு இருந்தான்.

ஏனோ
கோயிலில்
சிவலிங்கத்தை
அமைத்த போது
லிங்கம் 
பீடத்தில் 
நிற்கவில்லை. 

அஷ்டபந்தனம்
ஆகவில்லை
அதனால் 
குடமுழுக்கு 
தடைபட்டு இருந்தது. 

கவலை
கொண்ட மன்னன் 
கதறிக்
கண்ணீர் வடித்து
கலங்கி நின்றான். 

அவனது 
கலக்கம்
போகருக்குத்
தெரிய வந்தது. 

அதனால்தான் 
ஓலை அழைப்பு. 

கூடவே
கருவூராரின் 
தவத்தின் ஊடேயும்
போகர் வந்தார்.

"கருவூராரே! 
தஞ்சைக்குப்
போ...

தரணியே 
வியக்க
இருக்கும்
தஞ்சைக்
கோவிலில் 
லிங்கப் பிரதிஷ்டை
தடைப்பட்டு
நிற்கிறது. 

உன்னால் தான் 
முடியும்!

காரணம்...
நீ 
அம்பாள் பக்தன்! "

போகரின் 
உத்தரவு
மறுப்பாரா
கரூவூரார்! 

மறுகணமே 
தஞ்சைக்கு 
வந்தார். 

வான்வெளிப்
பயணம் 
சித்தர்களுக்கு 
எளிதே!
விரைந்து வந்தார்.

அதே சமயம் 
'கருவூர்த் தேவரால்
இக்காரியம் 
சித்தி பெறும்'
என
ஓர் அசரீரி
சோழமண்டலத்தில் 
எழுந்திருந்தது.

கேட்ட அரசன் 
"கருவூராரைத் 
தேடி 
 அழைத்து வா ...."
ஆட்களை 
அனுப்பி 
கவலையோடு
காத்திருந்தான்.

தஞ்சை வந்த
சித்த புருஷர்
அழுதிருந்த 
அரசனுக்கும் 
மக்களுக்கும் 
ஆறுதல்
சொல்லிவிட்டு
சிவலிங்கத்தைப்
பார்த்தார்
பீடத்தைச்
சோதித்தார்.

ஒரு பிரம்ம 
ராட்சசி 
பீடத்தில் 
இருந்து கொண்டு 
தடை செய்வது
தெரிய வந்தது.

ராட்சசி மீது 
தான் 
போட்டுக் கொண்டிருந்த 
தாம்பூலச் சாறை
மெல்லத் துப்பினார்.

பிரம்ம ராட்சசி 
நெருப்பாய் 
எரிந்து போனாள்.

அஷ்டபந்தன 
மருந்தைப் 
பிசைந்து 
லிங்கப் பிரதிஷ்டை 
செய்தார். 

உடனே 
அமர்ந்து 
உயர்ந்தது
அச் சிவலிங்கம். 

"ஹர... ஹர.." 
 என 
எழுந்தது 
மக்களின் 
கூக்குரல்.

சரணம் 
என்று 
சரணடைந்தான் 
மாமன்னன். 

வாழ்த்தி 
விடை பெற்றார் 
கருவூரார்.

'ஞான குருவே '
எனக் கூவி 
அவர் 
சென்ற திசை 
தொடர்ந்தான் 
ராஜராஜன்.

திரும்பி கூட பார்க்காமல் 
திசை நோக்காமல்
நடை தொடந்தார் கருவூரார்.
அதுதானே சித்தர் போக்கு !

அதன் பின்னர்
நன்றியாய்
செய்தான் 
மாமன்னன் 
ராஜராஜன் 
நல்லதொரு 
காரியத்தை. 

கோயிலுக்கு 
அருகே 
கரூவூராருக்குச்
சன்னதி 
அமைத்தான். 

அவர் சிலை 
வைத்தான். 
அவரைப் பூசித்து பூசித்து 
மகிழ்வு கண்டான்.

இன்று கூட 
கோவிலில் 
ராஜராஜனும் 
கருவூராரும்
அருகருகே
இருக்கும் 
பழங்கால 
ஓவியம் 
பார்க்கலாம். 

கருவூரார் சன்னதியில்
தரிசித்து அருள் பெறலாம்.

நடந்தவை அறிந்த 
போகர் 
மிக மகிழ்ந்தார். 
உளமாற மெச்சி
மகிழ்ந்தார்.

ஊரில் 
உலகில் 
சிலைப் பிரச்சனை 
எனில் 
உடன் 
போகர்
திருமூலர் போன்ற 
சித்த பிரான்களுக்கு 
ஞாபகம் வருவது 
கருவூரார் பெயரே.

இப்படித்தான் 
சிதம்பரத்தில் 
ஒரு பிரச்சனை.

சோழ மன்னன்
இரணிய வர்மன்
தீர்த்த யாத்திரைப்
பிரியன். 

பயணத்தின் போது
தில்லை வந்தான். 

அங்கு
சிற்றம்பல 
திருக்குளமான
சிவகங்கைத் 
தீர்த்தத்தில்
நீராடினான். 

தண்ணீரில்
மூழ்கிய போது
ஓர் 
ஓங்கார நாதம்
கேட்டது. 

தண்ணீர்
மேலே
வந்தான்
ஏதும் 
கேட்கவில்லை. 

மீண்டும் 
நீரினுள் 
மூழ்கினான்.

கண் திறந்து 
பார்த்தான்.
இப்போது 
ஆடல் வல்லானின்
அற்புத நடனம்
காட்சியாய் தெரிந்தது. 

கூடவே
ஓங்கார நாதமும்
ஓங்கி ஒலித்தது.

வியந்த மன்னன்
தான் கண்ட
நாதனை ஓவியமாய்
எழுதினான். 

அவ்வோவியத்தை
விக்கிரகமாக்கி
பொன்னம்பலத்தில்
வைத்து
உலகோர்
அனைவரும்
தரிசனம் செய்ய 
ஆர்வம் கொண்டான். 

தமிழகத்தில்
சிறந்த
சிற்பிகளை 
அழைத்தான்.
விருப்பத்தைச்
சொன்னான். 

48 நாளில் 
செய்து 
முடிப்பதாக
சிற்பிகன் சொல்ல 
வேண்டிய தங்கம்
வாரிக் கொடுத்தான் 
சோழ அரசன்.

சிற்பிகளும் 
சாதாரணமானவர் 
அல்லர்.
கோயில் சிலைகளை 
வார்ப்பதில் வல்லவர். 

அவர்கள் 
ஆசை ஆசையாய்
முயற்சிக்கையில்
ஒவ்வொரு நாளும் 
ஏதோ ஒரு 
காரணத்தால் 
விக்கிரகத்தில் 
குறை 
எழுந்த வண்ணமே
இருந்தது.

ஆயிற்று
47 நாட்கள்.

மன்னனின் கோபம்
சிற்பிகளுக்குத்
தெரியும் ...
தண்டனை...
அரச தண்டனை...
மரண தண்டனை...
நினைத்துப் பார்த்து 
கதி கலங்கி
அழத் தொடங்கினர்.

விஷயம்
போகருக்குப்
போனது. 

ஞான வழித்
தந்தி மூலம்
கருவூராருக்குச்
செய்தி போனது.

போகரின்
உத்தரவை  ஏற்றார்.
விரைந்தார் 
சிதம்பரத்திற்கு! 

"கவலைப்
படாதீர்கள்...
ஒரு நாழிகை
நேரத்தில்
தங்க விக்கிரகம் 
தயாராகும். 

ஆறுதல் சொன்னார்
அடுத்து
காரியத்தில் இறங்கினார். 

சிற்பிகளுக்கு
நம்பிக்கை இல்லை தான்.
ஆனாலும் காத்திருந்தனர்
கலக்கத்தோடும்
கண்ணீரோடும். 

கருவூரார்
பணி முடித்து
அனைவரையும்
அழைத்தார். 

அம்பலக் கூத்தனின்
அழகுத் திருவுருவம் 
அப்படி ஒர் அம்சமாய் 
அமைந்திருந்தது.

"அப்பாடா....
உயிர் பிழைத்தோம் "
என்று 
ஏதோ ஒரு சாமியார் போலிருந்த
கருவூராரை உச்சி மீது வைத்து
கொண்டாடத் தொடங்கினர்.

அரசன் வந்தான் 
அக மகிழ்ந்தான். 

நினைத்தபடி
விக்கிரகம் செய்த 
சிற்பிகளைப் 
பாராட்டினான்.
புகழ்ச்சி வார்த்தைகளை
வள்ளலாய் வாரி இறைத்தான்.

அருகிருந்த
மந்திரி 
"அரசே! 
கொடுத்த தங்கம்
மிக அதிகம் .
மீதக் கணக்கை 
சோதித்து விட்டு 
பரிசு மழைகளால்
சிற்பிகளை 
மகிழ்விக்கலாம். "

சரியாய் போட்டார்
குறுக்கே அரிவாளை! 

மீதமிருக்கும் 
துகள்கள்
சோதிக்கப்பட்ட போது 
செம்பு கலந்திருப்பது 
கண்டறியப்பட்டது. 

சோழ
சாம்ராஜ்யமே
அதிரக்
கத்தினான்
இரணிய சோழன். 

"கலப்படம்...
கலப்படம்...
நம்பிக்கை 
 மோசடி...!"

சிக்கல் வந்ததும்
நடந்ததைச் 
சொல்லி 
கருவூராரைக் 
கை காட்டினர்
சிற்பிகள். 

மன்னனின் 
கோபக் குறிப்பறிந்த
காவலர்கள் 
ஓடிச் சென்று 
கருவூராரைப் பிடித்து 
வந்தனர். 

"சிறையில் தள்ளுங்கள்..."
அதிரடித்  தீர்ப்பை 
அரசன் தந்தான். 

அப்போது அங்கே
போகர் பெருமான்
பிரசன்னமானார். 

கூடவே சீடர்கள். 
அவர்கள் வசம்
மூட்டைகள்.
அவை நிறைய
தங்கத் துகள்கள். 

"மன்னா...

கருவூரார்
என்
மாணவர்...
அவரையா
சிறையில் வைத்தாய்...?"

"மாபெரும்
மோசடிக்குத்
தண்டனை
சிறைவாசம் "
என்றான்
மன்னவன்
உறுதியாக! 

"மன்னா...!

சிலையாகச் செய்து
வணங்க வேண்டியவனைச்
சிறைப்படுத்தி விட்டாய்....
இது மாபெரும் பாவம்!

போகரின் முகம் 
சினத்தில் சிவந்தது.
எல்லையில்லா கோபம்.
அடுத்தது சாபம்...?

உரத்த குரலில்
ஒலித்தார்....

"உனக்குத் தெரியுமா? 

சுத்தத் தங்கத்தில்
விக்கிரகம் செய்ய 
முடியாது...
செம்பு கலந்தாலே
வடிவம் கைகூடும். 

மேலும்....."
மெல்லிய குரலில்
சொன்னார். 

"சுத்தத் தங்கம்
கொடுக்கும் ஒளி
நாளாக நாளாக
பார்ப்பவர்
பார்வத் திறனை
பாழ்படுத்தி விடும். "

பின்
உரத்துச் சொன்னார்.

நீ 
கொடுத்த
தங்கத்தைத்
தந்து விடுகிறேன்
என் மாணவனை
விடுதலை செய். 

இதோ
மாற்றுத் தங்கம் 
அதிகமாய் 
வேண்டுமானாலும்
தருகிறேன். 

தராசுத்தட்டில்
விக்கிரகம் வைக்கப்பட்டு 
ஈடான 
தங்கமும்
நிறைக்கப்பட்டது. 

"உன் தங்கத்தை 
எடுத்துக்கொள்...
என் தங்கத்தை 
என்னிடம் தா. "

வேகமாய்
நடராஜர் விக்கிரகத்தை 
எடுத்தபடி 
கிளம்பத் தயாரானார்
போகர் பிரான். 

அவரது
கோபம் கண்டு
மிரண்டு போன
அரசன்
போகரின்
பாதம் பணிந்தான். 

கண்ணீர் சொறிந்து
காலடி தொழுதவன் 
கருவூராரை
விடுவிக்கக் 
கட்டளையிட்டான்.

சிறையில்
பூட்டிய பூட்டு
பூட்டியபடி இருக்க 
அறைக்குள்
கருவூராரைக் 
காணவில்லை.

"என் சீடனை தா...
வேலை இருக்கிறது
செல்ல வேண்டும்..."
போகர்
சற்றே
உரத்த குரல் கொடுத்தார்.

மன்னன்
பதிலேதும் இல்லாமல் 
பரிதவித்தான். 

சிறையில் இருந்து 
திரும்பிய காவலர்கள்
தயங்கியபடியே 
சொன்னார்கள் 
"அரசே! 
அவரைக் 
காணவில்லை..."

"அப்படியா! "
கலகலவென்று 
சிரித்தார் போகர். 

"கருவூரானே!

எங்கே போனாய்? 
எல்லோரும்
பார்க்கும் படி
தரிசனம் தா!"

"குருவே! 

தங்கள் திருவருளால்
இங்கேதான் 
இருக்கிறேன்...."
கூறிய படி 
திருவடிவு
தாங்கியபடி
வெளியேவந்தார்
கருவூர் சித்தர்.

அரசன்
சிற்பிகள் 
காவலர் 
அத்தனை பேரும் 
வணங்கினர்
இரண்டு
சித்தர் பெருமக்களையும். 

அம்பலவாணராம்
நடராஜர் சிலையை
அரசனிடம் தந்தார் 
போகர் பெருமான்.

கோயில்
அமைய வேண்டிய முறை 
தெய்வத்திற்குரிய
இடங்கள்
பிரதிஷ்டை முறை
உரிய பூசை வகைகள் 
என
கோயில் இலக்கணம்
சொல்லித் தந்தார்
கருவூரார்.

பின்னர்
தில்லையிலிருந்து
விடை பெற்றனர் 
ஈடில்லா 
சித்தர் பெருமக்கள் .

பின் 
எத்தடையும் இல்லாது 
கோயில் உருவானது.

விக்கிரகம் 
பேரருளோடு 
அருள் பாலிக்க 
ஆரம்பித்தது.

சிதம்பரம் 
கோவிலில் 
நடந்த 
இச்சம்பவம் 
தஞ்சை கோவிலில்
கருவூரார்
பிரதிஷ்டை 
செய்வதற்கு 
முன்னர்
நடந்தது
என்பது 
தொடர்புடைய புராணங்கள்
மற்றும்
சித்தர் பாடல்கள்
கூறும் வரலாறு.

அழைத்தது 
போகரல்ல
திருமூலர் 
என்கிறது
ஒரு குறிப்பு.

திருமூல நாதர் 
தானே 
தில்லையில் வீற்று
எல்லையில்லா 
அருள் வழங்கும்
ஆதி நாதப் பெருமான் !?

எனவே
திருமூலராகவும்
இருக்கலாம். 

கொங்கணர் 
வடித்த காவியம் 
இதே 
சம்பவத்தைச்
சொல்லி
விரிகிறது.

கடைசியில் 
சோழ மன்னன்
முற்றும் துறந்து
முனிவரானான்
என்பது
அதில் முடிவாய் 
இருக்கிறது.
ஆதி கோயில்
சிதம்பரம் 
அடுத்து
எழுந்ததே 
தஞ்சை
பெரிய கோயில்
தஞ்சைக்கு வந்து 
அஷ்டன பந்தனம் செய்து 
கும்பாபிஷேகம் கண்டு
கருவூர் திரும்பும் 
கருவூரார் வழியில் 
திருவரங்கம்
சென்றார். 

அங்கு நடந்தது
ஆன்மீக அற்புதம். 

சித்தர்
கருவூரார்
பெருமையை
உலகுக்குச் சொன்ன
உயரிய சம்பவம்.

ஓம் நமசிவாய!

(பாகம் 2 - தொடரும்)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)