விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -2) - மாரிமைந்தன் சிவராமன்

 

விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -2)

சிவனையே கண்டித்த சிவனடியார்

ஆழ்ந்து சிந்தித்தால் 
ஓர் உண்மை 
தெரியவரும்.

விறன் மிண்டர் தான்
திருத்தொண்டர் தொகை 
சுந்தரரால் அருளப்படுவதற்கும் 
அதை ஒட்டி 
சேக்கிழார் பெரியபுராணம் 
படைப்பதற்கும் காரணகர்த்தா. 

விறன் மிண்டர்
கோபக் குரல் 
எழுப்பி இராது
இருந்திருந்தால்
அடியார்கள் வரலாறு 
கிடைத்திருக்காது.

இது அருளாளன் 
அருளிய விளையாட்டு.
விறன்மிண்ட நாயனாரும் 
சுந்தரமூர்த்தி நாயனாரும்
கூத்தபிரான் 
நடத்திய நாடகத்தின் 
இருதுருவ நாயகர்கள்.

'திருத்தொண்டர் தொகை' 
இயற்றி முடித்த பின்னர்
திருவாரூர் கோயிலின் 
வடக்கு வாசலில் 
காட்சியளித்து 
விறன் மிண்டரின்
சமகாலத்து அடியாரான
சுந்தரமூர்த்தியாரின் 
கரம் பற்றி
கரை சேர்த்துக் கொண்டார்
அருள் நிறை ஆதிமூர்த்தி.

சுந்தரமூர்த்தி நாயனார் 
அருள் பயணம் இவ்வாறிருக்க 
சிவன் மீதே
சினம் கொண்ட
விறன் மிண்டர் 
என்னவானார் 
என்று பார்ப்போமா ?

சுந்தரமூர்த்தி நாயனார் 
திருவாரூர் கோயிலில் 
தியாகேசுவரத் தேவரின் 
திருவருள் கிடைக்கப்பெற்று 
கோயில் வாசல் 
திரும்புவதற்குள் 
கோபத்தின் 
உச்சத்தில் இருந்த 
விறன்மிண்ட நாயனார் 
கடுங்கோபத்துடன் 
கோயிலை விட்டு மட்டுமல்ல
திருவாரூரை விட்டே
வெளியேறினார்.

'இனி 
சிவனடியார்களை மதிக்காத
திருவாரூரை 
மிதிக்க மாட்டேன்'
என்று சூளுரைத்தார்.

திருவாரூருக்கு 
வடக்கே உள்ள 
புற்றாங்கரையில் 
மனைவியுடன் குடியேறினார்.
அங்கே 
சிவனடியார்களை 
உச்சிமேல் வைத்து 
உபசரித்துக் 
கொண்டாடி வந்தார்.

பலகாலம் சென்றும் 
சிவன் மீதும் 
சுந்தரமூர்த்தியார் மீதும் 
கொண்ட 
கோபம் மட்டும் 
குறைந்தபாடில்லை.

சிவனடியார்களுக்கு 
அமுது படைக்கும் போது 
அருகில் அமர்ந்து
பணிவோடு தன்னுடைய 
உடை தளர்த்தி 
உடைவாளை 
வலப்பக்கம் வைத்துவிட்டு 
அடியாரை வணங்கி 
'சுவாமிக்கு எந்த ஊர்?'
எனச் சாந்தமாக கேட்பார்.

வந்தவர் 
ஏதேனும் ஒரு ஊர் பெயர் 
சொன்னால் தப்பிக்கலாம்.

திருவாரூர் என்று 
பதிலளித்தால் 
பாவம் சிவனடியார் 
பதறியபடி 
பறந்தோட வேண்டியிருக்கும்.

உடைவாள் எடுத்தவண்ணம் 
காவியுடை அடியாரை 
ஊர் எல்லை வரை துரத்தி 
காலை வெட்டிச்
சாய்த்து விட்டுத்தான் 
மறுவேலை பார்ப்பார்.

நாயனாரின் மனைவிக்கு
இதில் ஏக வருத்தம்.
ஏகபத்தினியால் 
எதுவும் செய்ய முடியவில்லை.

வீட்டிற்கு வரும் 
அடியவர் வந்தவுடன் 
பணிவிடை செய்வது போல் 
"சொந்த ஊர் திருவாரூர் 
என்று சொல்லிவிடாதீர்கள்... சுவாமி...." 
எனப் பாதம் தொட்டு கேட்பாள்.

எத்தனை நாட்கள்தான்
உலகாளும் ஆரூரார் 
இக்கொடுமையைப் 
பார்த்துக் கொண்டிருப்பார்..?

ஒரு நாள் 
உமாதேவிக்குக் கூட 
சொல்லாமல் 
செங்குன்றூர் வந்தார் 
சிவனடியார் வேடத்தில்.

நாயனாருக்கு 
சொல்லெனா மகிழ்ச்சி.
நாயனாரின் மனையாளுக்கு 
'கால் வெட்டப்படும்'
ரகசியத்தை 
சொல்லிவிட வேண்டும் 
என்ற தவிப்பு.

கை அலம்ப 
தண்ணீர் தரும்போது 
அடியார் வேட ஆதிநாதனிடம் 
காதில் ஓதி வைத்தாள் 
கற்புடை நல்லாள்.

"அம்மா....!
எனக்குப் பொய் சொல்லி 
பழக்கம் இல்லை.
நீ வேண்டுமானால் 
ஓர் உதவி செய்.

உன் கோபக்காரக் கணவன் 
உடைவாளை கீழே 
வைக்கும் போது 
வலப்புறம் வைக்காமல் 
பார்த்துக் கொள்.

அவன் கவனிக்காத போது 
அவ்வாளை இடப்பக்கம் 
மாற்றி வைத்து விடு."

"சரி" என்றாள்
சர்வேஸ்வரனை 
அறிந்து கொள்ள முடியாத 
அந்த பாக்கியவதி.

விருந்து படைக்கப்பட்டது.
அறுசுவை உணவு 
பரிமாறப் பட்டது. 
ஏழாவதாக 
நாயனாரின் 
ஆ௹ராருக்கு எதிரான 
அவலச்சுவை 
கேள்வியாய் வந்தது 
நாயனாரிடமிருந்து.

"சுவாமி... 
நீங்கள் எந்தப் பக்கம்...?"

"ஏன் சந்தேகம் ?
திருவாரூர் தான்..."
கண்கள் விரித்து
கன்னக்குழியில்
புன்னகை விளையாடப் 
பூரித்துச் சொன்னார்.

அவ்வளவுதான்...!

அனிச்சையாய் 
விறன் மிண்டரின் வலக்கை 
உடைவாளை எடுக்க 
வலதுபுறம் விரைந்தது.

உடைவாள் தான் 
அங்கு இல்லையே !

பேரதிர்ச்சியில் 
சுற்றி முற்றி பார்த்துவிட்டு 
இடதுபுறம் பார்த்து
கொலைவாளினைக் 
கையிலெடுத்தார்.

அதற்குள் 
ஆட்ட நாயகன் 
ஓட்டம் பிடித்து விட்டார்.

விறன் மிண்டர் விடவில்லை.

விறன் என்பதன் 
பொருளே வீரம்,
துணிவு என்பதே.
விறனும் மிண்டும் 
திருவருள் நெறியில் 
இருந்ததாலேயே தான் 
விறன் மிண்டர்
என்ற பெயரே வந்தது.

சிவபெருமான் 
சிரித்தபடி ஆடி ஓடி 
பல அடி தூரம் 
தள்ளி நின்று 
ஆட்டம் போட 
வெறித்தபடி பாய்ந்தார் நாயனார்.

குதூகலத்துடன்
ஓடிக்கொண்டிருந்தவர்
ஓர் இடம் வந்ததும் 
'அப்பாடா' என்று 
குதித்து ஆடினார்.

"அப்பனே இது
திருவாரூர் எல்லை.
நீதான் 
இங்கு வர மாட்டேன்
என்று சபதம் எடுத்திருக்கிறாயே !"
கெக்கலித்தார் 
சொக்கநாதர்.

விறன்மிண்டருக்கு 
ஆலகால விஷம் உண்டவரின் 
விஷமம் புரிந்தது.

ஆனால் அப்போதும் 
கோபம் தணியாமல் 
தன் காலை வெட்டத் துணிந்தார் 
விறன் மிண்ட நாயனார்.

ஆனால் அவர் கை 
துளிகூட அசையவில்லை.
ஆட்டுவிப்பவன்
அசைந்தால் தானே 
அகிலமெல்லாம் அசைந்தாடும்.

தன்னிடம் வந்ததும் 
ஓடிப் போக்கு காட்டியதும் 
சுந்தரரை யாரெனப் 
புரிந்து கொள்ளாமல் இகழ்ந்ததும் 
இப்போது ஆரூரான் அருகில் 
திருவாரூர் எல்லலையில் நிற்பதும்  
தியாகேசுவரரின் கருணையே 
எனக் கணத்தில் உணர்ந்து 
அசையாது இருந்த கரங்கள் 
இப்போது அசையவே 
கண்ணீர் மல்க 
அடியார் வேடத்தில் வந்த 
சிவபெருமான் 
திருவடி பிடித்தார்.

தான்
சுந்தரரை இகழ்ந்தது கூட 
திருத்தொண்டத்தொகை திருப்பதிகம் 
அருளச் செய்ய 
சிவபெருமான் 
தன் வாயிலாக நிகழ்த்திய
திருவருட் செயல் 
என உணர்ந்தார்.

அக்கணத்தில் 
தியாககேவரர் 
கமலாம்பாள் சமேதரராய்
ரிஷப வாகனத்தில் தோன்றி,

"முடிவிலா அன்பு
கொண்ட பேரன்பனே!

அடியாரை வழிபட்ட பிறகே 
சிவமூர்த்தியை வணங்க வேண்டும் 
என்ற உயரிய
சைவ மரபை 
உலகுக்கு உணர்த்தவே 
உம்மையும் சுந்தரரையும் 
பயன்படுத்திக் கொண்டோம்.

உன் 
ஒப்பற்ற சிவனடியார் பக்திக்கு
என் பரிசாக உனக்கு சிவபுரத்தில் 
சிவ கணங்களின் தலைவர்
பதவி காத்திருக்கிறது.

நீ என்றும் 
என் நேசத்திற்குரிய சிவநேசன்."

மாயமாய் மறைந்தனர் 
மறை நாயகனும் 
நிறை நாயகியும்.

'நல்லார் இணக்கமும் 
நின் பூசை நேசமும் 
ஞானமும் அல்லாது 
வேறு நிலை உளதோ'
என்ற ஞானப் பாடலில் 
பட்டினத்தடிகள்
நல்லார் என்று விளிப்பது 
சிவனடியார்களைத் தவிர 
வேறு யார் இருக்க முடியும்.?

'வரிபொழில் சூழ் குன்றையார் 
விறன்மிண்டற்கு அடியேன்'

என சுந்தரரே வியந்து 
திருத்தொண்டத் திருத்தொகையில் 
புகழ்வது 
விறன்மிண்ட நாயனாரின் 
புகழ்பாடும் திருப்பதிகம்.

(விறன்மிண்ட நாயனார் புராணம் - நிறைவுற்றது)

கருத்துகள்

  1. மிக நிறைவான... முழுமையான பக்தியை வெளிப்படுத்தும்.. எதார்த்தமான எழுத்துக்களுடன் கூடிய அருமையான படைப்பு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)