சோமாசி மாற நாயனார் புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு
சோமாசி மாற நாயனார் புராணம்
மாரி மைந்தன் சிவராமன்
சோழவள நாட்டில்
மாஞ்சோலைகள்
நிறைந்த
புனித தலம் திருவம்பர்.
இவ்வூரில்
காட்டுமலை மேல்
ஒரு திருக்கோயில்.
இக்கோயிலில்
சிவலிங்கத்திற்குப்
பின்புறம் அம்மையப்பர்
திரு உருவம்.
இறையைப்
பார்ப்பதற்கே
ஏகாந்தமாய்
இருக்கும்.
தரிசிப்பதற்குச்
சொல்லவே வேண்டாம்.
இறையாசி பெறுவதற்கு
இணையற்ற கோயில்.
'அம்பர்திருப்
பெருங்கோயில்
அமர்கின் றான்காண் '
என்கிறது தேவாரம்.
ஆம்....
பாடல் பெற்ற திருத்தலம்
மாகாளம் பெருங்கோயில்.
கோசெங்கட்
என்னும் சோழ மன்னன் மாடக்கோயில்கள்
கட்டுவதில்
பேரார்வம் கொண்டவன்.
எழுபது
மாடக்கோயில்கள்
கட்டியுள்ளான்.
முதலில் கட்டியது
திருவானைக்கா கோயில்.
முடிவாகக் கட்டியதுதான்
அம்பர் பெருந்திருக்கோயில்.
ஊர் சிறப்பும்
கோயிற் பெருமையும்
ஒருங்கே கொண்ட
திருவம்பரில்
ஒரு சிவபக்தர்.
அந்தணர் குலம்.
பெயர் சோமாசியார்.
ஒரு சிவபக்தர்
நாயன்மாராக
பக்தி உயர்வு பெற முடியும்
என்பதற்கு உதாரண புருஷர் சோமாசிமாறர்
என உரத்துச் சொல்லலாம்.
பொதுவாக சிவபிரான்
சோதனைகள் பல செய்து திருவிளையாடல்கள் புரிந்து நாயன்மாரைத்
தெரிவு செய்வதே வழக்கம்.
அதில்
விதிவிலக்குப்
பெற்றவர்களும் உண்டு.
அவர்களில் ஒருவரே
சோமாசியார்.
அவரை
நாயன்மார் என்றழைத்து
அம்பலத்தரசன்
அரவணைத்தற்கும்
அருகில் வைத்துக்
கொண்டதற்கும்
அடிப்படையாய்
ஆதாரமாய் அமைந்தது
அவர் செய்து வந்த
ஐந்து அருட்செயல்கள் தாம்.
ஒன்று...
ஈஸ்வரர் பக்தி.
இரண்டு....
அடியவர் எக்குலத்தவராயினும் வேறுபாடு பார்க்காமல் .
பணிவிடை செய்து
திருவமுது படைத்தது.
மூன்று....
எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
உலக நன்மைக்காக
இறையனாரை வழிபடும்
சிவ வேள்வியான
யாகம் செய்தது.
நான்கு....
உரிய உயரிய
குருவைத் தேடி
உணர்ந்து
சரணாகதி அடைந்தது.
ஐந்து...
'நமசிவாய' எனும்
திரு ஐந்தெழுத்தை
விதிப்படி ஓதி வந்தது.
இனி
சற்று விரிவாகப்
பார்ப்போமா !?
சோமசியார்
இயல்பிலேயே
குறையொன்று இல்லாத
இறை தேடல் மிக்கவர்.
அடியவர் தன்மை.
எளிய வாழ்வு.
ஈசனைப் போற்றுவதில்
பூரணத்துவம்.
அடியார்கள் உள்ளத்தில் சிவபெருமான்
எப்போதும் உறைவதால்
அடியாரை வணங்குதலே சோமாசியாரின்
பக்திக் கோட்பாடு.
சிவனடியார்
எக்குலத்தவர் ஆயினும்
வேறுபாடு பார்க்காமல்
பணிவிடை செய்து
பேரன்பு காட்டி
அடியார் மனம்
நிறையச் செய்து
மனம் நிறை கொள்வார்.
'எத்தன்மையினராயினும்
ஈசனுக்கு அடியர் என்றால் அத்தன்மையர் தான்
நம்மை ஆள்பவர் '
எனும் கொள்கையை
மெய்யறிவால் உணர்ந்து
சிவ பணிகள்
செய்து வந்தார்.
அக்காலத்தில்
குல வேறுபாடு பார்க்காமல்
இறை அடியார்களிடம்
பக்தி வைத்தலும்
பணிவிடை செய்ததும்
கற்பனைக்கு அப்பாற்பட்டது அன்றோ !
அது மட்டுமா ?
வயதில் சிறியவர்
ஏழை செல்வந்தர்
நோய்வாய்ப் பட்டவர்
என்று ஏதும் பார்க்க மாட்டார்.
அப்படிப்பட்ட
ஆன்மநேயர்.
இறையே விரும்பும்
இறைநேசர்.
அது போலவே
யாகங்கள் செய்யும்
யோகம் கொண்டவர். '
பல்வேறு யாகங்களில்
ஈடுபாடு கொண்டவர்.
தன்னலமின்றி .
விருப்பம் எதுவும் இல்லாமல்
எவ்வித புகழ் பயன் எதிர்பார்க்காமல் யாகத்தை இறை தொண்டாக
சிவ வேள்வியாக செய்வார்.
ஏழு உலகங்களும்
உவப்ப
நியதியாக
வேள்வி செய்வார்.
திருவருள் பெற
குருவருளே சாதனம்
என்பதை உணரும்
மெய்ஞானம்
சோமாசியாருக்கு இருந்தது.
அதனாலும்
அவர் தவப் பயனாலும்
அவருக்கு ஒரு குரு
அருகிலேயே
எளிதாகக் கிடைத்தார்.
குருவை இறுகப்
பற்றிக் கொண்டார்.
இறைவனை அடைந்தார்.
அந்த ஞானகுரு
யார் தெரியுமா ?
வன்தொண்டர் என்றும்
ஆதி சிவனின்
அற்புதத் தோழன் என்றும் அழைக்கப்படும்
சாட்சாத்
சுந்தரமூர்த்தி நாயனார் தான்.
தொடர்ந்து
பல்வேறு யாகங்கள்
செய்து வந்த
சோமாசியாருக்கு
ஓர் ஆசை இருந்தது.
அது பேராசை
அவர் செய்ய விரும்பியது
அரிய யாகம் என
கருதப்படும்
சோம யாகம்.
ஏனோ
பலமுறை முயற்சித்தும்
கைகூடி வரவில்லை.
போதாக்குறைக்கு
இறைவனே நேரில் வந்து
யாகத்தின் பலனான
அவிர்பாகத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
என்று வேறு ஆசைப்பட்டார்.
உலகுக்கே
வழங்கிக் கொண்டிருப்பவருக்கு இவர் வழங்க வேண்டுமாம்.
நடக்கிற காரியமா இது ?
ஆனால் நடந்தது.
அதுவும்
ரிஷிகளும் முனிவர்களும் ஆன்றோர்களும்
சான்றோர்களும் தேவர்களும்
அத்தனை கடவுளரும்
மெச்ச நடந்தது.
அருகில்
திருவாரூரில் வசிக்கின்ற
சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டு
அவரையே குருவாகப்
பற்றிக் கொள்ள
முயற்சிகள் மேற்கொண்டார்.
குருவருள் கிடைத்து விட்டால்
திருவருள் கிடைத்துவிடும்
என பெரிதும் நம்பினார்.
அந்த நம்பிக்கை
அடுத்த சில நாட்களில்
திருவம்பர்
மாகாளம் கோயிலில்
அருள் பாலிக்கும்
மாகாளநாதர் அருளால
மெய்படத் துவங்கியது.
அதுசமயம்
திருவாரூரில்
அன்றாடம்
தியாகராஜ பெருமாளைத் தரிசித்தபடி
சிவதொண்டு ஆற்றி வந்த
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
திடீரென இருமல் மிகுந்தது.
நெஞ்சில் கபம் கட்டி
வாட்டி எடுத்தது.
வைத்தியர் பலர்
பார்த்த வைத்தியம்
பலனற்றுப் போனது.
இச்செய்தியை
திருவம்பர் வந்த
திருத்தொண்டர்
ஒருவர் சொல்ல
பரிதவித்துப் போனார்
சோமாசி மாறர்.
'பழக்கம் இல்லையே...! பார்த்ததில்லையே...!
சுந்தரர்
பார்க்க விரும்புவாரோ....
மாட்டாரோ....? '
என பலவாறு யோசித்தார்.
தர்மபத்தினி
சுசீலாதேவியை அழைத்து தூதுவளை பூ, காய், கீரை தந்து
சுந்தரரிடம் எப்படியாவது
சேர்ப்பிக்கச் சொன்னார்.
பார்வதி கடாட்சம் நிரம்பிய சுசிலையின் அணுகுமுறையால் தூதுவளை
கஷாயமாய்
சுந்தரர் வயிற்றில்
பால் பார்த்தது.
நோய் பறந்துபோனது.
இந்த மூலிகையைக்
கொண்டு வந்தது யார்
என அறிய விரும்பினார்
நன்றி கூற விரும்பினார் நம்பியாண்டார்.
சுந்தரரின் மனையாள்
சங்கிலி அம்மையார்
சாதுரியமானவள்.
கொண்டு வந்து கொடுத்தவரை ஞாபகத்தில் வைத்திருந்தாள்.
அப்புறம் என்ன ?
சுந்தர்
திருவம்பர் வந்தார்.
மாகாளம் கோயிலில்
காளநாதரைத்
தரிசித்தார்.
சதாகாலமும்
சிவ நாமம்
உச்சரித்த வண்ணம்
கோவிலில் இருக்கும் சோமாசியாரை
நன்றியோடு அழைத்து
இறுகத் தழுவி கொண்டார்.
கண்ணோடு
கண்ணினை நோக்கி
நண்பர் ஆக்கிக் கொண்டார்.
சோமாசியாரோ
சுந்தரரைக் குருவாக
தாள் பணிந்தார்.
பல நாள் கனவு
நனைவானது.
இப்படி அதிசயமாக
குரு சீடரைத் தேடி வருவதை இறைவன் கூட்டிவித்ததாக ஆன்றோர் சொல்வர்.
சோமாசியார்
அடுத்தடுத்து
திருவாரூர்
செல்ல ஆரம்பித்தார்.
குரு சீடர் உறவு
சீர்பட வளர்ந்தது.
ஒரு நாள்
சோமாசியார் தன் ஆசையான சோமயாகம் பற்றி கூறி
இறைவன் தியாகராஜரே
நேரில் கலந்து கொண்டு
அவிர்பாகம் பெற்றுச்
செல்ல வேண்டும்
என்ற விருப்பத்தை
ஏக்கத்துடன் தெரிவித்தார்
'அதற்கென்ன
இப்போதே
அழைத்து விடுவோம் "
என அம்பலத்தரசனை
அழைத்து
விஷயத்தை விவரித்தார்
சுந்தரர்.
சுந்தரருக்கும்
சர்வேஸ்வரனுக்கும்
உள்ள நட்புதான்
உலகம் அறிந்ததே !
மறுப்பேதும் சொல்லாமல் மகேஸ்வரன் சம்மதித்தார்.
வைகாசி
ஆயில்ய நட்சத்திரத்தில்
வருவதாக வாக்களித்தார்.
கோலாகலமாக சோமயாகம் தொடங்கியது.
நாட்டின்
பல பகுதிகளிலிருந்து
வந்திருந்த
வேத விற்பனர்கள்
முனிவர்கள்
யாகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
இறைவன்
வாக்களித்த நன்னாளில்
தியாகேஸ்வரர்
வருகைக்காகக்
காத்திருந்தார்
சோமாசியார்.
அப்போது
நான்கு வேதங்களையும்
நான்கு நாய்களாக உருமாற்றி இறந்த ஒரு கன்றை சுமந்தபடி புலயன் வேடத்தில்
கூத்தரசன்
வருகை புரிந்தான்.
பார்வதி தேவியோ
தலையில் மதுக்குடத்துடன்
பின் தொடர்ந்து வந்தாள்.
அவர்கள் பின்னால்
குழந்தைகளாக
மனித முகத்துடன் விநாயகரும்
அழகிய பால முருகனும்
வந்து கொண்டிருந்தனர்.
இவர்களைப்
பார்த்த மாத்திரத்தில்
பயந்து போன
வேத விற்பனர்கள்
காத தூரம்
ஓடிப் போயினர்.
சோமாசியாரும்
மனைவி சுசிலையும்
அச்சம் ஏதும் கொள்ளாமல்
அண்ட சராசரங்களை
ஆள்பவனின்
திருநாமத்தை
உச்சரித்தபடி இருந்தனர்.
இதையெல்லாம்
இறைவன் ஈஸ்வரன்
ரசித்தபடி இருக்க
சோமாசியாரின்
விருப்பம்
நிறைவேறும் வண்ணம்
விநாயகர்
தன் சுயரூபத்திற்கு மாறி
யானை முகத்துடன்
ஆனந்தமயமாகக்
காட்சியளித்தார்.
ஆச்சரியம் அகலாமல்
விநாயகரைத் தொழுத
சோமாசியார்
திருவாரூர்
தியாகேசப் பெருமான்
நேரில் தோன்றி
ஆசிதந்து
அவிர்பாகம் பெற்றுச்
செல்ல வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.
அச்சம் தீர்த்த
விநாயகர்
'அப்படியே ஆகட்டும் '
என அர்த்தத்தோடு சொல்ல
காட்சி மாறியது.
அக்கணமே
புலயன் வேடம் துறந்து
சிவபெருமான் பார்வதி
சமேதரராய்
அருட்காட்சியளித்து
சோமாசியார் தம்பதிக்கு
ஆசிகளைச் சொல்லி
அவிர் பாகத்தைப் பெற்று சோமாசியாரை
சோமாசிமாற நாயனாராக
ஏற்ற வண்ணம்
விடைபெற்றார்.
அதுபோது
தேவர்களும் முனிவர்களும்
வானிலிருந்து
பூச்சொரிதல் நடத்தி
சோமாசிமாற நாயனாரை
வாழ்த்தி மறைந்தனர்.
சோமாசியார் தான்
குரு சுந்தரரைத் தேடி
திருவாரூர் போய்
சரணாகதி அடைந்தார்.
என்றும்
ஒரு குறிப்பு சொல்கிறது..
சோமாசி மாற நாயனார்
இறையடி இணைந்து
நாயன்மாராக திகழ்வதற்கு பஞ்சாட்சரம் என்னும்
ஐந்தெழுத்தை ஓதிய வண்ணமிருந்ததும்
ஒரு முக்கிய காரணம்.
உண்மைதான்....
திரு ஐந்தெழுத்தை
விதிப்படி ஓதினால்
சித்தம் தெளியும்.
ஐம்புலன்களும்
ஐம்பொன்னாகும்.
காமம் குரோதம்
கோபம் மதம்
மாச்சரியம் ஆகிய
குற்றங்கள் ஒடுங்கி
ஓதுபவரைக் காக்கும்.
உடனிருப்பவரையும் காக்கும்.
ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் உறைகின்றான்.
அப்படியிருக்க
ஏன் தோன்றுவதில்லை
என்ற கேள்வி வரக்கூடும்.
கலங்கிய தண்ணீரில்
சந்திர சூரிய பிம்பங்கள் தோன்றுவதில்லை.
அதுபோன்றே
அறியாமை எனும்
கலங்கிய மாசுடை அகத்தில் இறைவன் தோன்ற மாட்டான்
அவன் தோன்றுவதற்கு
ஒரே வழி
இடையறாது
பஞ்சாட்சரம் ஓதுதலே.
'நமசிவாய'
என
தொடர்ந்து ஓதி வந்தால்
ஆணவ அழுக்கு நீங்கி
சித்தம் தெளிவடைந்து
சிவனைக் காண முடியும்.
சோமாசியார்
இறைவனடி சேரும்
இந்த
ஐந்து சூட்சம வழிகள் மூலம் சிவபெருமானை அடைந்து நாயனாராக மலர்ந்தார்.
ஆம்... சோமாசியார்
சோமாசி மாற நாயனாராக
மிளிர்ந்தார்.
'அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு. இதுசாதாரண வாக்கல்ல. குரு சுந்தரர் தன் சீடர் சோமாசி மாற நாயனார் குறித்துச் சொன்ன பெருமித வாக்கு.
ஓம் நமசிவாய...
சிவராமன் ஐயா அவர்களின் சோமாசி மாற நாயனார் வரலாற்று வர்ணனை அருமை. இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் கோவில்திருமாளம். திருவாரூருக்கு அருகில் இருக்கிறது.இங்கு ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. சைவ நெறி தழைக்கச் செய்யும் தங்களின் இந்த முயற்சி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏
பதிலளிநீக்குஎளிமை. அருமை.
பதிலளிநீக்கு